லைகா தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி, நாக சௌர்யா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் ஹாரர் படம் ‘
லைகா தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி, நாக சௌர்யா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் ஹாரர் படம் ‘தியா’. படத்தின் பெயர் முதலில் கரு என வைக்கப்பட்டு பின் தியா என மாற்றப்பட்டது. புதிதாக கல்யாணம் ஆன தம்பதியராக கிருஷ்ணா( நாக சௌர்யா) மற்றும் துளசி (சாய் பல்லவி). திருமணம் ஆன நாள் முதலே துளசி எப்போதும் ஒரு நோட்டு புத்தகம் சகிதமாக சோகமாகவே இருக்க கிருஷ்ணா துளசியிடம் ஏன் எனக் கேட்கிறார். பிறகு நம்ம அபார்ஷன் பண்ணாம இருந்தா இந்நேரம் நமக்கு ஒரு குழந்தை ஐந்து வயசுல இருப்பா என்கிறார் துளசி. கிருஷ்ணாவோ நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி என துளசியின் மனநிலையை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால் இவர்களுக்கு பிறக்காத குழந்தையோ துளசியுடன் ஆவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. துளசியை சுற்றி உள்ள ஒவ்வொருவராக இறக்க முடிவு என்ன ஆத்மா என்ன ஆனது என்பது மீதிக்கதை. சாய்பல்லவி, நாக சௌர்யா எதார்த்தமான பாத்திரம் என்பதால் இயல்பான கணவன் மனைவியாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முக்கியமாக கணவனுக்கு என்ன ஆகுமோ எனத் தவிக்கும் மனைவியாக சாய் பல்லவியின் நடிப்பில் அத்தனை எதார்த்தம். இவர்களையும் கூட தூக்கி சாப்பிடுகிறார் பேபி வெரோனிகா அரோரா , அமைதியான பார்வை, அம்மாவின் பாசத்திற்கான ஏக்கம் , சாந்தமாக கொலை செய்வது என தமிழுக்கு மற்றுமொரு திறமையான குழந்தை நட்சத்திரம் கிடைத்திருக்கிறார். திஸ் இஸ் ராகவன் இன்ஸ்டிங்க்ட் என கெத்து காமெடி பில்டப் தருவதும், அவள பார்க்குற எல்லாரும் சாகுறாங்க என்னையும் சாக சொல்றியா” என லாக்கப்பில் போய் ஒளிந்துக் கொள்வதுமாக ஆர்.ஜே. பாலாஜி காமெடி சீரியஸ் என மாறி மாறி திறமையைக் காட்டியிருக்கிறார். மேக்கிங் மற்றும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் என்றாலும் பயத்தை உருவாக்கும் கட்சிகள் முற்றிலுமாக இல்லை. பிறக்காத குழந்தை ஆவியாக வந்து பழித் தீர்க்கும் என்னும் கதை கொஞ்சம் டூ மச் ரகம் என்றாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் நிகழும் கருக்கலைப்பு சம்பவங்களை தீய செயலாக கருத்து சொல்லியதில் பாராட்டுகள். மொத்தத்தில் இதுவரை தமிழில் யாரும் சொல்லாத வித்யாசமான அறிவுரை சொல்லியிருக்கும் பட்சத்தில் ’தியா’ திரைப்படத்தை வரவேற்கலாம்.