102 நாட் அவுட் - விமர்சனம்
5/7/2018 2:37:13 PM
102 வயதுள்ள அமிதாப் பச்சனுக்கு, இந்த உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவர் என்ற சாதனை புரிய ஆசை. வயதுதான் 102. ஆனால், சிந்
102 வயதுள்ள அமிதாப் பச்சனுக்கு, இந்த உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவர் என்ற சாதனை புரிய ஆசை. வயதுதான் 102. ஆனால், சிந்தனை எல்லாமே இன்றைய இளைஞர்களைப் போல். எனவே, எப்போதும் ஜாலியாக இருப்பார். ஆனால், அதற்கு முற்றிலும் நேர்மாறான கேரக்டர், 75 வயதாகும் அவரது மகன் ரிஷிகபூர். பழமைவாதி. இப்படிப்பட்டவர்களை முற்றிலுமாக வெறுப்பவர், அமிதாப். தன் வீட்டிலேயே அதுவும் மகனே அதுபோல் இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால், தன் மகனை முதியோர் இல்லத்துக்கு அனுப்ப முடிவு செய்கிறார். அப்பாவின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைகிறார், ரிஷிகபூர். வீட்டிலேயே தங்க வேண்டும் என்றால், அமிதாப் சில நிபந்தனைகள் விதிக்கிறார்.
அதெல்லாம் ரிஷிகபூருக்கு சவாலாக அமைகிறது. அதைச் செய்து முடித்தால்தான் அவருடைய வீட்டில் இருக்க முடியும். பின்விளைவு என்ன என்பதை ஹியூமரிசமும், ஆங்காங்கே எமோஷனலுமாக, மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது படம். போலிச்சாமியார்கள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஓ மை காட் படம் எடுத்து, பாலிவுட்டில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியவர், டைரக்டர் உமேஷ் சுக்லா. அவரது இந்தப் படம், முழுக்க முழுக்க உறவுகளின் உணர்வு களை மென்மையாகப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. அதைக் காமெடி கலந்து சொல்வதுதான் உமேஷ் சுக்லாவின் தனி ஸ்டைல்.
இதிலும் அந்த ஸ்டைலை மெயின்டெயின் செய்திருக்கிறார். 76 வயதுள்ள சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 102 வயது அப்பா வேடத்தில் அசால்ட் காட்டியிருக்கிறார். அவரது காமெடி டைமிங் எல்லாமே தியேட்டரை அதிரிபுதிரியாக்கி விடுகிறது. அவருக்கு ஈடாக, காட்சிக்குக் காட்சி ஸ்கோர் செய்திருக்கிறார் ரிஷிகபூர். எப்போதும் இறுக்கமாக இருக்கும் அந்த வேடத்தில் ரிஷிகபூரைத் தவிர யாருமே பொருந்தி இருக்க மாட்டார்கள். ஜிமித் திரிவேதியும் தனது பங்குக்கு அசத்தி இருக்கிறார்.
மூவரையும் சுற்றித்தான் முழு படமும். அதுவும் ஒரே வீட்டில். ‘ஆனால், டல் அடிக்காத காட்சிகளால் தூள் கிளப்பி இருக்கிறார், ஸ்கிரிப்ட் ரைட்டர் சவும்யா ஜோஷி. மராட்டிய மேடை நாடகத்தை தழுவி படம் உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை, மகனின் பாசக் கதையை, 102-75 வயது என்றவிதத்தில் கையில் எடுத்ததுதான் இந்தப் படத்தின் சிறப்பு. அதில் பல இடங்களில் நம்மைச் சிரிக்க வைத்து, சில இடங்களில் கண்கலங்கச் செய்த வகையில் அழகாகி இருக்கிறது இந்தப் படம். தவறியும் தவற விட்டுவிடக்கூடாத படம் இது.