புதிய படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் சொகுசு கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக கவுதம் வாசுதேவ் மேனன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார். தற்போது நடிகர் தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் டோட்டா என்ற படமும், விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற இரண்டு படங்களை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டு, இன்று அதிகாலை பழைய மாமல்லபுரம் சாலை வழியாக துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு கவுதம் வாசுதேவ் மேனன் விலை உயர்ந்த சொகுசு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்துள்ளார். செம்மஞ்சேரி ஆவின் பால் பண்ணை சிக்னல் அருகே வரும் போது, துரைப்பாக்கத்தில் இருந்து வந்த ஒரு லாரி சிக்னலில் ‘யு’ டர்ன் அடித்து மீண்டும் துரைப்பாக்கம் நோக்கி சென்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத கவுதம்மேனன் தனது காரை பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் வேகத்தின் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பக்கம் கடும் சேதமடைந்தது. சொகுசு கார் என்பதால் ஏர் பேக் வெளியே வந்தது. இதனால், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதை பார்த்த பின்னால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், காரில் இருந்து கவுதம் வாசுதேவ் மேனனை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.