டபுள் ஹீரோ, டபுள் ஹீரோயின் நடிக்கும் படங்களில் அவ்வப்போது சர்ச்சை எழுவதுண்டு. சில சமயம் படப்பிடிப்பு பாதித்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த ‘பலூன்’ படப்பிடிப்பில் ஹீரோ ஜெய் ஒத்துழைப்பு தராததால் நஷ்டம் ஏற்பட்டதாக அவர் மீது அப்பட தயாரிப்பாளர் புகார் கூறினார். இயக்குனர் சுந்தர்.சி தற்போது கலகலப்பு 2ம் பாகம் இயக்குகிறார். இதில் ஜீவா, ஜெய், கேத்ரின் தெரசா, நிக்கிகல்ராணி என டபுள் ஹீரோ, டபுள் ஹீரோயின்கள் நடிக்கின்றனர். குஷ்பு தயாரிப்பு. ஹிப் ஆப் தமிழா இசை. கலகலப்பு 2ம் பாகத்தில் ஜெய்யால் பிரச்னையா என்றதற்கு சுந்தர்.சி அளித்த விளக்கம்: ஜெய்யால் பிரச்னையா என்கிறார்கள். அவருடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. கலகலப்பு 2ம் பாகம் படப்பிடிப்பின்போது கால்ஷீட் டைம் காலை 7 மணி என்றால் அவர் காலை 6.45 மணிக்கே செட்டில் தயாராக இருப்பார். ஜீவா, ஜெய் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் நிறைய இருந்தன. அதை படமாக்கும்போதும் எந்த பிரச்னையும் இல்லை. இருவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். கேத்ரின் ெதரசா, நிக்கி கல்ராணி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஆனாலும் யாருக்காகவும் நான் காத்திருந்து படப்பிடிப்பு நடத்திய சூழல் ஏற்படவில்லை. ஒவ்வொருவரும் சரியான நேரத்துக்கு படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு தடையில்லாமல் வேகமாக நடத்த முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.