இன்கிரிடிபிள் 2
7/10/2018 2:20:48 PM
அனிமேஷன் படமாகவே இருந்தாலும், 14 வருடங்களுக்கு முன்பு வசூலில் சாதனை படைத்த படம், இன்கிரிடிபிள். நீண்ட காத்திருப்பு, எதிர்பார்ப்புக்குப் பிறகு இப்போது அதன் 2ம் பாகம் ரிலீசாகி இருக்கிறது. பாப் என்கிற மிஸ்டர் இன்கிரிடிபிள் குடும்பமே சூப்பர் பவர் குடும்பம். மிஸ்டர் இன்கிரிடிபிள், மிகப் பெரிய பலசாலி. அவரது மனைவி ஹெலன், ரப்பராக வளைந்து நெளியும் திறமை பெற்றவர். மகள் வயலட், மறையும் சக்தி கொண்டவள். மூத்த மகன் டேஷ், அதிவேகமாக ஓடக்கூடியவன். கடைக்குட்டி குழந்தை ஜேக், 17 வித சூப்பர் பவர்களைக் கொண்டவன். குறிப்பாக, நினைத்த அவதாரங்களை எல்லாம் எடுப்பான்.
முதல் பாகத்தில் மிஸ்டர் இன்கிரிடிபிள் ஒரு வில்லனிடம் மாட்டிக்கொள்ள, அவரைக் குடும்பம் சேர்ந்து காப்பாற்றுவதுதான் கதை. 2ம் பாக கதை மிக வித்தியாசமானது. முதல் பாக கிளைமாக்ஸ் காட்சியில் பூமியைத் துளைத்து வெளியே வந்த வில்லன், இந்தமுறை இன்கிரிடிபிள் குடும்பத்தாருடன் அதிபயங்கரமாக மோதுகிறான். இதனால், சொத்துகள் நிறைய சேதம் அடைகிறது. உடனே அரசாங்கம், சூப்பர்மேன்களை சட்ட விரோதமானவர்கள் என்று அறிவிப்பு வெளியிடுகிறது.
எனவே, இன்கிரிடிபிள் குடும்பம் அமைதியான வாழ்க்கைக்கு திரும்புகிறது. ஆனால், சூப்பர்மேன் கள் மனிதர்களுக்கு நல்லது மட்டுமே செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க நினைக்கும் கோடீஸ்வரர், அதற்காக ஹெலனை தேர்வு செய்கிறார். அவர் மீது ஒரு கேமரா பொருத்தி, அவர் செய்யும் நன்மைகளை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறார். இந்த ஆய்வு ஒரு சிக்கலில் முடிகிறது. முக்கிய மனிதர்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் வசியம் செய்து, தான் சொல்வதை எல்லாம் செய்ய வைக்கிறாள் வில்லி.
இதையடுத்து, நாட்டுக்குள் நிறைய அசம்பாவிதங்கள் நடக்கிறது. அவற்றை எப்படியாவது தடுக்க முயற்சி செய்கிறார், ஹெலன். ஆனால் அவரையும், காப்பாற்ற வந்த இன்கிரிடிபிளையும் வசியம் செய்து, தன் விருப்பத்துக்கு ஆட வைக்கிறாள். அந்த வில்லியிடம் இருந்து தங்களின் பெற்றோரை பிள்ளைகள் எவ்வாறு காப்பாற்றுகிறார்கள் என்பது கதை.
இது கார்ட்டூன் படம் என்பதை மனதில் இருந்து அகற்றிவிட்டால், பல ஹாலிவுட் சூப்பர்மேன் படங்களை விட பிரமாதப்படுத்துகிறது. விறுவிறுப்பான திரைக்கதை, திகைக்க வைக்கின்ற ஆக்ஷன், இடையே காமெடி மற்றும் கணவன், மனைவிக்குள் ஏற்படுகின்ற ஈகோ என, படம் ஆரம்பித்தவுடனே முடிந்துவிட்ட பிரமிப்பு ஏற்படுகிறது. பிராட் பேர்ட்டின் இயக்கம், மைக்கேல் ஜியாச்சினோவின் பின்னணி இசை, வால்ட் டிஸ்னியினின் பிரமாண்டம் போன்றவை, 14 வருடக் காத்திருப்பை அர்த்தப்படுத்தி இருக்கிறது.