மும்பை எக்ஸ்பிரஸ், முதல்வன், பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. கடந்த 2 ஆண்டுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்கா சென்று அதற்கான சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு நடிப்பிலிருந்து விலகி இருக்க முடிவு செய்திருக்கிறார். இதுபற்றிஅவர் கூறியதாவது: சமீபத்தில் எனது பிறந்த தினம் கொண்டாடினேன். என்னுடன் நடித்தவர்கள் என்னை இயக்கியவர்கள் மட்டுமல்லாமல் என்னுடன் நடிக்காதவர்களும் நேரில் வந்து வாழ்த்தினார்கள். அப்போதான் என் மீது திரையுலகினர் இன்னமும் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். கடைசியாக நாம் எல்லோரிடமும் எதிர்பார்ப்பது நல்ல பெயரைத்தான். அதை எவ்வளவு சம்பாதித்திருக்கிறோம் என்பதை நட்பு பாராட்டதவர்களும் வந்து வாழ்த்தும்போதுதான் தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் மது அருந்துவதை அடியோடு நிறுத்திவிட்டேன். ஒழுக்க நெறியுடன் எனது வாழ்வை அமைத்துக்கொண்டிருக்கிறேன். எனது சினிமா அனுபவம், உடல்நலன் மற்றும் உடற்தகுதி பற்றி 2 புத்தகங்கள் எழுதுகிறேன். வரும் டிசம்பர் மாதம் வெளியாகும். தற்போது நல்ல படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அதுபோல் அமையாவிட்டால் சில மாதம் நடிக்காமல் கூட இருப்பேன். அந்த நேரத்தில் நான் நீண்ட பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறேன். இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறினார்.