தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படம் மூலம் கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டவர் விஜய் தேவரகொண்டா. தற்போது தமிழில் ‘நோட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இளம் நடிகரான விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் ஆந்திராவில் திரைக்கு வந்த கீதா கோவிந்தம் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. இதையடுத்து நடிகரின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கி உள்ளனர். சமீபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவருடன் விஜய் தேவரகொண்டா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியானது. அவரது கன்னத்தில் நடிகர் முத்தமிடுவதும், கட்டிப்பிடித்து செல்பி எடுத்திருப்பதுமாக வெளியாகி இருக்கும் புகைப்படங்களால் காதல் கிசுகிசு சூடுபிடித்திருக்கிறது. விஜய் தேவரகொண்டா ஏற்கனவே ஒரு பேட்டியில் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் யார்? அவரது பெயர் என்ன? போன்ற விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார். தற்போது நடிகருடன் நெருக்கமாக இருக்கும் வெளிநாட்டு பெண்தான் அவரது காதலி என்று தகவல் பரவிவருகிறது. இதுபற்றி விஜய் தேவரகொண்டா பதில் எதுவும் தராமல் மவுனம் காத்து வருகிறார்.