டிராவல் போட்டோகிராபரான விஜய் சேதுபதி, தன் ஸ்டூடண்டுகளுக்கு போட்டோகிராபி பயிற்சி அளிக்க தஞ்சாவூர் வருகிறார். வாட்ச்மேன் ஜனகராஜ் உதவியுடன் பள்ளிக்கூடத்துக்கு சென்று பழைய நினைவுகளில் மூழ்குகிறார். 1996ல் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தன்னுடன் படித்த திரிஷாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறார். அவரும்தான். சில காரணத்தால் காதல் கை கூடாமல் போகிறது. பழைய நண்பர்களை பார்க்க விரும்பும் விஜய் சேதுபதி அனைவருக்குமான சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். அப்போது சிங்கப்பூரில் இருக்கும் திரிஷாவும் சென்னை வருகிறார். பழைய காதலர்கள் சந்திக்கும்போது பழைய நினைவுகளில் மூழ்குகிறார்கள். மீண்டும் பழைய காதல் எட்டிப் பார்க்கிறது. ஆனால் அவர்கள் வாழ்க்கை திசை மாறிப் போயிருக்கிறது. கடைசியில் அவர்களின் காதல் என்ன ஆகிறது என்பதை உருக உருக சொல்லி இருக்கிறார் அறிமுக டைரக்டர் பிரேம் குமார்.விஜய் சேதுபதிக்காகவே சில வேடங்கள் எழுதப்பட்டாலும் சில வேடங்கள் எழுதிய பிறகு விஜய் சேதுபதிதான் ஒரே சாய்ஸ் என முடிவு செய்தாலும் சில வேடங்களில் வேறொருவர் நடிக்க வேண்டியது ஆனால் அதில் விஜய் சேதுபதி நடித்தாலும் மனுஷன் அந்த வேடமாகவே மாறிப்போகிறார். எப்படியப்பு இப்படி? நீ இன்னும் வெர்ஜின்தானா என ஒரு கேள்வியை திரிஷா கேட்க, அதற்கு விஜய் சேதுபதி தரும் ரியாக்ஷன் ஒன்றே போதும். அவரது நடிப்புக்கு லைக்ஸுகள் போட. விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு பின் இந்த படத்தைதான் தன் தோளில் சுமந்திருக்கிறார் திரிஷா. தனக்கு முக்கியத்துவம் வேடம் தந்தால் அதில் கலக்கிவிடும் அவர், இதிலும் அதைத்தான் செய்திருக்கிறார். அதேபோல் தனக்கான படமாக அமைந்தால் வழக்கத்தை விட அழகாகவும் ஆகிவிடுவார் போலிருக்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு இதில் அவரது அழகை ரசிக்க முடிகிறது.சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்யன், மாணவி கவுரி, இருவரும் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கின்றனர். தேவதர்ஷினி, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ் இருந்தும் காமெடி இல்லை. செகண்ட் ரவுண்ட் வந்திருக்கும் ஜனகராஜ் மனதில் நிற்கிறார்.மகேந்திரன் ஜெயராஜ், சண்முகசுந்தரம் இருவரின் ஒளிப்பதிவு கனக்கச்சிதம். கோவிந்த் வஸந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையும் சோடைபோகவில்லை.படத்தின் நீளத்தில் இன்னும் கத்திரி போட்டு, மெதுவாக நகரும் திரைக்கதையை கொஞ்சம் வேகம் கலந்து தந்திருக்கலாம். மற்றபடி படத்தில் பெரிய குறைகள் இல்லை. ஆட்டோகிராஃப் படத்துக்கு பிறகு காதலை கவிதையாக சொன்ன படமாக நெஞ்சில் நிற்கிறது 96.