சுண்டாட்டம்
3/11/2013 1:43:57 AM
வட சென்னையை சேர்ந்த இர்பான், கேரம் விளையாட்டில் கில்லி. அவருக்கு தங்கையுடன் படிக்கும் அருந்ததி மீது காதல். இந்நிலையில் தாதா நரேனின் ஆட்களுக்கும் இர்பானுக்கும் உரசல் ஏற்படுகிறது. அதனால் இர்பானைப் போட்டுத்தள்ள துரத்துகிறது அடியாள் படை. கடைசியில் நரேனிடம் சிக்கும் இர்பானின் வாழ்க்கை மாறுகிறது. கேரம் விளையாட்டை சூதாட்டமாக்கி கிளப் நடத்தும் நரேனுக்கு ஜெயிக்கிற குதிரை கிடைத்தால் விடுவாரா? கம்பெனி வீரனாக்கி களத்தில் இறக்குகிறார்.
அங்கு ஏற்கெனவே கம்பெனி வீரனாக இருக்கும் மதுவுக்கு இது ஈகோவை உண்டாக்குகிறது. சைக்கோவாகிறான். இர்பானை பலிகொள்ள அலைகிறான். அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதி கதை. கேரம் விளையாட்டுக்கு பின்னால் இப்படி ஒரு இருட்டு உலகமா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு அதன் அடி ஆழம் வரை சென்று காட்டியிருக்கிறார் இயக்குனர்.
வட சென்னையின் தெனாவெட்டு இளைஞன் கேரக்டரில் பொருந்துகிறார் இர்பான். ஆத்திரத்தில் எதிரிகளை பிளந்துவிட்டு பிறகு பயந்து திரியும்போதும், வீட்டுக்குள் நுழைந்ததும் அப்பாவி பிள்ளையாக அடங்கிபோவதுமாக கேரக்டரை உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார். காதலியிடம் வீராவேசமாக பேசிவிட்டு அவளது போலீஸ் அண்ணனை கண்டதும் பொறிகலங்கி பம்முவதுமாக இயல்பாக நடித்திருக்கிறார். குளோஸ்,அப்பில் திரும்பி, சிரித்து, சிணுங்கி காதலை இன்னும் அழகாக்குகிறார் அருந்ததி. கிளைமாக்சில் அனுதாபத்தையும் அள்ளிக் கொள்கிறார்.
எப்போதும் போதை, கண்களில் வெறி, அவமானத்தால் கூனி குறுகும் வில்லன் மது, வெறியாட்டம் போடுகிறார். கூடவே இருந்து கடைசியில் துரோகியாக மாறும் ஸ்டாலின் அமைதியான வில்லனாக வருகிறார். நரேன் பக்குவமான தாதா. ஹீரோவின் நண்பனாக வந்து காமெடி பண்ணுகிறார் சென்ராயன்.
அச்சுவின் பின்னணி இசை மிரட்டல். பிரிட்டோவின் இசையில் பாடல்கள் சுகராகம். பாலகுருநாதனின் ஒளிப்பதிவு படத்தை தரம் உயர்த்துகிறது. கேரம் போர்ட்டை சுற்றி அத்தனை கோணங்கள் வைத்தும் கேரம் காய்களையும் கதையோடு ஒன்றவும் வைத்திருக்கிறது கேமரா. முன்பாதி திரைக்கதையில் இருந்த வலு, பின்பாதியில் குறைகிறது. காதலை பிரதானப்படுத்துவதா? தாதா மோதலை சொல்வதா? கேரம் ஈகோ பகையை முடிப்பதா என்பதில் தடுமாற்றம் தெரிகிறது.
, தினகரன் விமர்சனக்குழு.