அரசியல் சதுரங்கம்
3/16/2013 12:27:24 AM
சாய்குமார் உள்ளாட்சி தேர்தலில் எதிராளியை சூழ்ச்சி செய்து போட்டுத் தள்ளிவிட்டு அவர் குடும்பத்தையும், பதவியையும் கைப்பற்றுகிறார். அதிலிருந்து துவங்கும் அவரது அரசியல் சதுரங்கம் அமைச்சர்வரை பரந்து விரிகிறது. அவர் தனது அரசியல் வாரிசாக தன் மனைவியின் முதல் மகன் சர்வானந்தையும், சொத்துக்களுக்கு வாரிசாக தனக்கு பிறந்த மகன் சந்தீப்பையும் உருவாக்குகிறார். ஆனால் சந்தீப்புக்கோ இரண்டுக்குமே தானே வாரிசாக வேண்டும். தான் மட்டுமே சாய்குமாரின் வாரிசு என்று நினைக்கிறார்.
வாரிசு யுத்தம் வெடிக்கிறது. தன் தந்தையை கொன்றவரே சாய்குமார்தான் என்ற உண்மை சர்வானந்துக்கு தெரிய வருகிறது. அவர் அடுத்து என்ன முடிவெடுக்கிறார். சாய்குமார் எந்த வாரிசு பக்கம் சாய்கிறார் என்பது மீதி கதை. கிராமத்து பண்ணை அடியாள் கேரக்டரிலிருந்து அமைச்சர் கேரக்டர்வரை பொறிபறக்க நடித்திருக்கிறார் சாய்குமார். முதலாளி மகனை கொன்று விட்டு ‘அய்யோ என் சுயநலத்துக்காக இப்படி செய்துட்டேனே’ என்று டிரைவரிடம் சென்டிமென்ட் நாடகம் ஆடி அவரையும் கைக்குள் கொண்டு வருவது, அதே சென்டிமென்டைக் கொண்டே கொன்றவனின் மனைவியையே மணந்து கொள்வது,
அவளது மகன் மீது வெளிப்படை பாசமும், தன் மகன் மீது உள்ளுக்குள் பாசமும் வைத்துக் கொண்டு சாய்குமார் நடத்தும் அரசியல் சதுரங்கம் அபாரம்.
சர்வானந்த் அடிதடி பார்ட்டியாக வந்தாலும் முகத்தில் அப்படியொரு சாந்தமான களை. சாய்குமார்தான் தந்தையை கொன்றவர் என்று தெரிந்த பிறகும் ‘அது நீங்க செஞ்ச கொலைகள்ல ஒண்ணு. ஆனா உங்களத்தான் நான் அப்பாவா நினைக்கிறேன்’ என்று பாசத்தை பொழிவது நடிப்பின் முத்திரை. அப்பாவியாக அறிமுகமாகி சைக்கோத்தனமாக அடுத்தடுத்து கொலைகள் செய்வதுமாக மிரட்டுகிறார் சந்தீப். கதாநாயகர்கள் அரசியல், மோதல் என்று பிசியாக இருப்பதால் நாயகிகளுடன் ரொமான்ஸ் பண்ண நேரம் இல்லை.
ரூபி பரிகார் அழகாக இருக்கிறார். நடிக்க வாய்ப்பு குறைவு. ரேஷ்மா, சந்தீப்பை காதலித்து பரிதாபமாகச் செத்துப் போகிறார். மகேஷ் சங்கரின் பின்னணி இசை படத்துக்கு பலம். வி.பிரபாகரின் அரசியல் வசனங்கள் அருமை. ஷ்யாம் தத்தின் ஒளிப்பதிவு கச்சிதம். உள்ளூர் மாவட்ட செயலாளரும் அவரது அடியாட்களும் அரசியலில் வளர அடிக்கும் கூத்துகள் சிரிக்க வைக்கிறது.
என்னதான் அமைச்சர் என்றாலும் அவரது அடியாட்கள் அடுத்தடுத்து பல கொலைகள் செய்து விட்டுப்போவதில் லாஜிக் இல்லை. அதுபற்றி எதிர்க்கட்சி கூடவா எதிர்த்து பேசாமல் இருக்கும்? சர்வானந்த் தம்பிக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்க தயாராகும்போது பிறகு எதற்கு அவரை அடியாட்களை வைத்து அடித்து துவைக்க வேண்டும். இப்படி சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் இது அரசியல் மசாலா.
, தினகரன் விமர்சனக்குழு.