பரதேசி
3/21/2013 12:38:29 AM
அடிமை இந்தியாவுல தேயிலைத் தோட்டத்துக்கு உரமான தமிழர்களோட வாழ்க்கைதான் படம். ‘ரெட் டீ’ங்கற நாவலை தழுவி எடுத்திருக்காங்க. 1939,ல நடக்குது கதை. சாலூர்ங்கற கிராமத்துல நம்ம அதர்வா (ராசா) டமாரம் அடிச்சுக்கிட்டு தர்மத்துக்கு ‘ஒட்டுபொறுக்கி’ ஓடியாடி வாழுறாரு. வேதிகா(அங்கம்மா)வுக்கு ராசா மேல ஒரு இது. ரெண்டு பேரும் அப்படி இப்படின்னு இருக்காங்க. இதுக்கிடையில பஞ்சத்துல இருக்கிற அந்த ஊர்க்காரங்களை நயமா பேசி பரதேசத்துக்கு (தேயிலை தோட்டத்துக்கு) கூட்டிட்டு போகுது கங்காணி நரி. கல்லு மண்ணு,
காடு மலைன்னு 48 நாளு நடந்து, அரை உசுரா அங்க போய் சேர்றாங்க. போன பிறகுதான் அது மீளமுடியாத நரகுழின்னு தெரிய வருது. கண்ணீர் விடுறதை தவிர வேறென்ன செய்ய முடியும்? இதுக்கிடையில ராசாவும் அங்கம்மாவும் அப்படி இப்படின்னு இருந்ததுல அவளுக்கு வயித்துல உண்டாச்சு. ராசா வருவான்னு பச்ச பிள்ளையோட ஊர்ல அங்கம்மாவும், அவளை பார்க்க முடியாம இவன் தேயிலை தோட்டத்துலயும் தவிக்க, கடைசியில என்னாச்சுங்கறதுதான் மனசை பிழியற கதை.
முதுகுல உப்புமூட்டைத் தூக்கிட்டு ஊரெல்லாம் சுத்தலாம் போல இருக்கு டைரக்டரு பாலாவை. ‘என்னல ஒலகப் படம். இதுதாம்ல சினிமா’ன்னு செவுட்ல அறைஞ்ச மாதிரி சொல்லிட்டார்லா. இப்படியொரு படத்தை கொடுத்துட்டு, ஈயம் பூசுன பாத்திரம் மாதிரி ஓரமா சத்தம் போடாம கெடக்காரு பாரேன், மனுஷன்! ‘ஒட்டுபொறுக்கி’ ராசாவா, அதர்வா. கரம்புன மண்டை, மூக்குவாளி, சாக்குல தச்ச சட்டை, நெத்தியில விபூதின்னு அமர்க்களமா வர்றாரு. ‘நியாயமாரே...’ன்னு கூப்பிட்டு டமாரம் அடிக்கிறதும் கல்யாண வேலையெல்லாம் பார்த்தவனை நெல்லு சோறு திங்க விடாம அங்கம்மா அழிச்சாட்டியம் பண்ணும்போது,
‘ராசா வண்டிய விட்டுருவேன்’ன்னு கண்கலங்கி தண்டோராவை அடிக்கும்போதும், பையன் கலக்கிடுதாம்லா. இந்த கேரக்டரு நாஞ்சில் நாடனோட ‘இடலாக்குடி ராசா’ கதையில வாரது. அதை அப்படியே இதுல வச்சிருக்காங்க. ‘அங்கம்மாவை கல்யாணம் பண்ண போறேன்’னு சொன்னதால பஞ்சாயத்துல சண்டை நடக்க, கூட்டத்துக்குள்ள இருந்துக்கிட்டு ராசாவும் அங்கம்மாவும் சைகையால பேசுறாங்க பாரு, இதைதான் கவிதைன்னு சொல்லுவாங்களோ என்னவோ? சொகமா இருக்குய்யா. தேயிலை தோட்டத்துல இருந்து உசுரை வெறுத்து தப்பிக்கும்போது ஓடுதாம் பாரு ஓட்டம், நெசமாவே நம்ப முடியலடெ. என்னா ஓட்டம்? கிளைமாக்ஸ்ல, பொத்தையில உட்கார்ந்துகிட்டு, ‘நியாயமாரே’ன்னு கொடுக்கிற குரல்ல கண்ணுரெண்டும் பிதுங்கி, ஈரக்குலை நடுங்கிருதுவே. அதர்வா உலுக்கி எடுத்துட்டாம்யா.
செக்க செவப்பான வேதிகாவை கருப்பாக்கி இருக்காரு பாலா. குயிலுக்கு குரலுதான் முக்கியம். நிறமா முக்கியங்கற மாதிரி, என்னமா நடிச்சிருக்கு புள்ள. பனியாரத்தை திங்க விடாம அதர்வாவை கிண்டல் பண்ணிட்டு கலங்குறது, பஞ்சம் பிழைக்க அதர்வா போகும்போது கிடந்து தவிக்கறதுலயும் கெறக்கிட்டா நடிப்புல.
தன்ஷிகாவுக்கு சின்ன கேரக்டருதான். ஒத்த பிள்ளைய தவிக்க விட்டுட்டு பொட்டுன்னு செத்து போயிருதா பாவி மவா. கங்காணியா வர்ற (ஜேடி) ஜெர்ரிதான் அடிச்சு எடுக்குற வில்லன். ஈவு இரக்கமில்லாத மிருகமால்லா நடிச்சிருக்காரு. ‘தோட்டத்துக்கு போற வரை தாங்காது. ரோட்டுல ஓரமா போட்டுட்டு வா’ன்னு ஒருத்தனை உசுரோட விட்டுட்டு போகும்போதே கங்காணியோட கொடுமை தெரிஞ்சுருதுவே. கண்ணு மண்ணு தெரியாம எல்லாத்தையும் போட்டு அடிக்கறதும் சம்பளம் கொடுக்கிறேன்னு சொல்லி பணத்தை காட்டிட்டு வச்சுக்கிறதும் பச்சைமலைக்குள்ள சத்தமில்லாத கொலை.
டுபாக்கூர் டாக்டர் ‘சித்தன்’ மோகன், தொழிலாளிகளை மதம் மாற்றுற ‘ஆன்மிக கங்காணி’ சிவசங்கர், சொடுக் சொடுக்குன்னு சொலவடையை சொல்லிட்டு போற கச்சம்மா பாட்டி, சில காட்சிகள்ல வர்ற ‘மந்திரி’ கவிஞர் விக்ரமாதித்யன்னு எல்லாருமே சிறப்பா நடிச்சிருக்காங்க. நாஞ்சில் நாடனோட வசனம் பல இடத்துல பளிச்சுனு இருக்கு. செழியனோட கேமரா பஞ்சத்து ஊருக்கும் பச்சைத் தோட்டத்துக்கும் சிறப்பா வித்தியாசம் காட்டியிருக்கு.
ஜி.வி.பிரகாஷ் தம்பி, பாடல்கள்லயும் பின்னணி இசையிலயும் ரொம்ப மெனக்கெட்டிருக்கு. வைரமுத்துவோட வார்த்தைகள்ல அழுத்தம். ஆர்ட் டைரக்டர் பாலசந்தர் போட்ட குடிசைகள் நிஜம் மாதிரியே இருக்கு. உடை அலங்காரம் செய்திருக்கிற பூர்ணிமாவுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கே. படத்துல குறையே இல்லையாவேன்னு கேக்காதீங்க. சோத்துல கல்லு கிடந்தா பொறுக்கித் தூரப்போட்டுட்டு திங்கலையா? நல்ல படத்துல போயி நொள்ளை எதுக்கு? பாருங்க. கண்டிப்பா பாருங்க. உங்களுக்குப் பிடிக்கும்யா.
, தினகரன் விமர்சனக்குழு.