தில்லாலங்கடி
7/28/2010 10:00:45 AM
எந்த வேலையாக இருந்தாலும் அதில் ‘கிக்’ இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஜெயம்ரவி. அதனால் அவரால் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடிவதில்லை. காதலும், கண்டவுடன், ஹீரோயிசத்தால், அனுதாபத்தால் வந்து விடக் கூடாது; கிக்குடன் வரவேண்டும் என்று நினைக்கிறார். ரவியின் இந்த கிக் பிரச்னையால் காதலை உதறிவிட்டு மலேசியாவுக்கு சென்று விடுகிறார் தமன்னா. கிக்கிலேயே பெரிய கிக், மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் என்பதை ஒரு சம்பவம் ரவிக்கு உணர்த்த, அவரது வாழ்க்கை பாதை மாறுகிறது. தமிழ்நாட்டில் பிரபலமான போலீஸ் அதிகாரி ஷாம். அவரின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய திருடன் மலேசியாவில்தான் இருக்கிறான் என்பதை அறிந்து அவனைத் தேடி மலேசியா வருகிறார். ஷாமுக்கும், தமன்னாவிற்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. ஷாம் தேடும் திருடனும், தமன்னாவின் இதயத்தை திருடியவரும் ஜெயம்ரவிதான். இந்த மூவருக்குமான தில்லாலங்கடி ஆட்டம் மீதிக் கதை.
‘லட்சம் ரூபாய் சம்பளத்துக்காக ஒரு கம்ப்யூட்டர் பெட்டி முன்னால உட்கார்ந்து கொண்டு கீ போர்டை தட்டிக்கிட்டிருக்க முடியாது. எந்த வேலையா இருந்தாலும் அதுல கிக் வேணும்’ என்று நினைக்கிற இளைஞன் கேரக்டர் தமிழ் சினிமாவுக்கு புதுசு. அதை ஜெயம்ரவி செய்யும்போது ஜாலி ரவுசு. எம்.எல்.ஏ நளினி மகள், டிரைவர் சத்யனை காதலிக்க அவர்களுக்கு திருட்டு கல்யாணம் செய்து வைக்கும் தகவலை நளினிக்கே சொல்லி அவரை வரவழைத்தே கல்யாணத்தை நடத்தி வைப்பதில் தொடங்குகிறது கிக் கலாட்டா. ‘திருட்டு கல்யாணத்தை வீட்டுக்குள்ள சாமி படத்து முன்னாடியே செய்யலாம். ஆக்ஷன், சேசிங், பைட்டுன்னு செஞ்சாத்தான் அதுல கிக் இருக்கும்’ என்று கிக்கிற்கு விளக்கம் சொல்லியே தனது கேரக்டரையும் சொல்லிவிடுகிறார்.
‘நீயா வந்து ஐ லவ் யூன்னு சொல்லணும் அதை என் காதால கேக்கணும். அதுதான் கிக்’ என்று தமன்னாவிடம் சொல்ல தமன்னா ஜெயம்ரவி மீது வேண்டுமென்றே வெறுப்பை வளர்க்க, அதுவே காதலாக உருமாறுவது அழகான கவிதை. கடைசியில் காதலையும், பிரிவையும் ஒரே நேரத்தில் சொல்லிவிட்டுச் செல்லும்போது உருக வைக்கிறார். மலேசியாவில் மீண்டும் ஜெயம்ரவி வந்து நிற்க, அவர் மெமரிலாஸ் பார்ட்டி என ரீல் விட, “எப்படியாவது அவனுக்கு நினைவு திரும்பச் செய்து என் கல்யாணத்தை பார்க்க செய்யணும்’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமன்னா வேலை செய்வதும், ரவிக்கு தன் காதலை சொல்லி நினைவுபடுத்திவிட்டு பிரிவை சொல்ல முடியாமல் தவிக்கும்போதும் தமன்னா தகதகக்கிறார். கடைசியில் மெமரிலாஸ் வெறும் நடிப்பு என்று தெரிந்ததும் ரவிமுன் ஆத்திரத்தை கொட்டும்போது, ‘நான் நடிச்சது உண்மைதான். என்னை மனசுல வச்சுக்கிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்கியே அதுவும் நடிப்புதானே’ என்று ரவி கேட்க, தன் மனதுக்குள் இன்னும் காதல் புதைந்திருப்பதை உணரும் அந்த தருணத்தில் இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
மலேசியாவில் மீண்டும் ஜெயம்ரவி வந்து நிற்க, அவர் மெமரிலாஸ் பார்ட்டி என ரீல் விட, “எப்படியாவது அவனுக்கு நினைவு திரும்பச் செய்து என் கல்யாணத்தை பார்க்க செய்யணும்’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமன்னா வேலை செய்வதும், ரவிக்கு தன் காதலை சொல்லி நினைவுபடுத்திவிட்டு பிரிவை சொல்ல முடியாமல் தவிக்கும்போதும் தமன்னா தகதகக்கிறார். கடைசியில் மெமரிலாஸ் வெறும் நடிப்பு என்று தெரிந்ததும் ரவிமுன் ஆத்திரத்தை கொட்டும்போது, ‘நான் நடிச்சது உண்மைதான். என்னை மனசுல வச்சுக்கிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்கியே அதுவும் நடிப்புதானே’ என்று ரவி கேட்க, தன் மனதுக்குள் இன்னும் காதல் புதைந்திருப்பதை உணரும் அந்த தருணத்தில் இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
ரவி&தமன்னாவின் காதல் எபிசோட் கலகலப்பும், கிளுகிளுப்புமாக இருக்க, ரவி&ஷாமின் ஆக்ஷன் எபிசோட் ராக்கெட் வேகமெடுக்கிறது. லவ்வர் பாயாக இருந்த ரவியை ராபின்ஹூட்டாக மாற்றும் அந்த சம்பவம் மனதை நெகிழ வைக்கிறது. கருப்பு பண முதலைகளிடம் ரவி கொள்ளையடிக்க போடும் திட்டங்களும், அதை முறியடிக்க ஷாம் எடுக்கும் முயற்சிகளுமாக ஆக்ஷன் சூட்டில் ஆவி பறக்கிறது. மலேசியாவில் இருவரும் ஆடும் திருடன்&போலீஸ் விளையாட்டு சுவாரஸ்யம். ஷாம் தேடும் ரவி, ஷாமின் அருகிலேயே இருப்பதும், அவரை கண்டுபிடிக்க முடியாமல் ஷாம் தவிப்பதுமான விறுவிறு திரைக்கதை பரபரக்கிறது.
அன்பான மனைவி அருகில் இருக்க மற்ற பெண்களுக்கு பிராக்கெட் போடும் ஜொள்ளு பார்ட்டியாக வடிவேலு வெடி வைக்கிறார். ரவியை வெறுப்பேற்ற தமன்னா, வடிவேலுவை காதலிப்பதாக சொல்ல அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வடிவேலு பெண் கேட்டுச் செல்வதும், கட்டிய மனைவியை போட்டுத் தள்ள திட்டமிடுவதுமாக அதிர வைக்கிறார். அவரும் மன்சூர் அலிகானும் நடத்தும் கூத்தில் தியேட்டர் சிரிப்பில் உருளுகிறது. பைத்தியக்கார டாக்டராக சந்தானம், எம்.எல்.ஏ. டிரைவராக சத்யன், மந்திரி பினாமியாக கஞ்சா கருப்பு, அடியாளாக மயில்சாமி என குரூப்பாக வந்து சிரிப்பை கொட்டிவிட்டுப் போகிறார்கள்.
சாக்லெட் ஹீரோவாக வலம் வந்த ஷாம், ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். கட்டுமஸ்தான அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரி வேடம் கச்சிதம். தமன்னாவுடன் திருமணம் என்பதை பெரிதாக கொண்டாடாமல் அடக்கமாக அதை எடுத்துக் கொள்வதும், கடைசியில் ரவியுடனான காதலை புரிந்து கொண்டு, ‘எனக்கு உன் காதலை விட நீதான் முக்கியம்’ என்று மென்மையாக விலகிக் கொள்வதுமாக தனது கேரக்டரை மெருகேற்றிக் கொள்கிறார்.
மகனுடன் தண்ணியடிக்கும் வித்தியாசமான தந்தை பிரபு. ‘அவன் என்னவாகப்போகிறானோ என்று எல்லோரும் கவலைப்படுறாங்க. அவன் என்ன ஆகப் போகிறான் என்று நான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்’ என்று மகன் மீது கொண்டுள்ள தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வித்தியாசமான தந்தையை கண்முன் நிறுத்துகிறார்.
யுவன்-தமன் கூட்டணியில் பாடல்கள் கிக் ரகம். பி.ராஜசேகரின் ஒளிப்பதிவு மலேசியாவின் அழகை அள்ளி வந்து கொட்டியிருக்கிறது. ஒரே ஷாட்டில் 5 தமன்னா, 15 ஜெயம்ரவியுடன் உருவாக்கியிருக்கும் ‘சொல்பேச்சு கேட்காத சுந்தரி...’ பாடல் தமிழ் சினிமா இதுவரை தொடாத தொழில்நுட்ப உயரம்.
தமன்னா, ஷாமிடம் தன் காதல் பிளாஷ் பேக்கை சொல்லும் பாணியில் முதன் பகுதி கதையை சொல்லும் யுக்தியில் தொடங்கி, இருவருக்குமே டார்க்கெட் ஜெயம்ரவிதான் என்ற புள்ளியில் கதையை நிறுத்தி இந்த மூவருக்குமான சடுகுடு ஆட்டத்தை சலிப்பு தட்டாத வகையில் ஆடியிருக்கிறது இயக்குனர் ராஜாவின் திரைக்கதை. மொத்தத்தில் ‘தில்லாலங்கடி’ எல்லா கிக்கும் கலந்த கலர்புல் காக்டெயில்.