காந்தி என்கிற விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம் ஆகியோர், சிறப்பு தீவிரவாத தடுப்புக்குழுவில் பணியாற்றுகின்றனர். இத்துறையில் பணியாற்றிய மோகன், தீவிரவாதிகளுக்கு உதவியதால், தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்படுகிறார். கென்யாவில் ஓடும் ரயிலில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் குழு ஒரு மிஷனை வெற்றிகரமாக முடிக்கும்போது, ரயிலில் பயணித்த மோகன் மனைவி கனிஹா, மகன் பலியாகின்றனர். இதில் உயிர் தப்பிய மோகன், பிறகு காந்தி விஜய்யை, அவரது மகன் ஜீவன் என்கிற விஜய்யை வைத்து எப்படி பழிவாங்குகிறார் என்பது திரைக்கதை. பாங்காங்கில் விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட 5 வயது மகன் ஜீவனை, அவன் வளர்ந்த பிறகு ரஷ்யாவில் அடையாளம் காணும் விஜய், வீட்டுக்கு அழைத்து வருகிறார். மகன் வரவினால் அம்மா சினேகாவும், தங்கையும் மகிழ்ந்திருக்கும் நிலையில், ஜீவனாக இல்லாமல், மோகனின் வளர்ப்பு மகனாக மாறும் சஞ்சய் விஜய், காந்தி விஜய்யையும், குடும்பத்தையும் கொல்ல முயற்சிக்கிறார். அது நிறைவேறியதா என்பது மீதி கதை. முழுநீள ஜனரஞ்சக படத்தைக் கொடுக்க இயக்குனர் வெங்கட் பிரபு உழைத்திருக்கிறார். தந்தை, மகன் ஆகிய 2 விஜய்களின் மோதல், அவரது ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட். காந்தி விஜய்க்குப் பொருத்தமான ஜோடி சினேகா. ஜீவன் இறந்ததை தாங்க முடியாமல் கலங்கி, மகளைப் பெற்று மருத்துவமனையில் இருக்கும் சினேகாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் விஜய் கலங்க வைக்கிறார்.
வில்லனாக மாறி ஜீவனாகவும், சஞ்சய்யாகவும் நடித்திருக்கிறார், மகன் விஜய். அவருக்கு ஜோடி மீனாட்சி சவுத்ரி, ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார். பிரசாந்த், லைலாவின் மகளாக வந்து, கிளைமாக்சுக்கு உதவியிருக்கிறார். மகளுக்கு ஏற்பட்ட கதியை நினைத்து கலங்கும் பிரசாந்த், வில்லனாக வரும் மோகன் மற்றும் பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி, யுகேந்திரன் வாசுதேவன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏஐ விஜயகாந்தை இன்னும் சிறப்பாக காட்டியிருக்கலாம். ஒரு பாடலுக்கு திரிஷா, ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் வருகின்றனர். சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்துள்ளது. கென்யா, பாங்காக், ரஷ்யா, சென்னை போன்ற இடங்கள் மனதில் பதிகின்றன. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது. இளையராஜாவின் பாடல்களும் வருகின்றன. அடுத்து இதுதான் நடக்கும் என்று கணிக்க முடிவது பலவீனம். படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.