மதுரை பகுதியில் வசித்து வரும் விக்ரம் பிரபுவுக்கு 33 வயதாகியும் கூட திருமணம் நடக்கவில்லை. பார்த்த பெண்கள் சிலர் அவரை நிராகரிக்கின்றனர். ஆனால், கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த சுஷ்மிதா பட் மட்டும் அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். பெண் வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஊருக்கு கிளம்பும்போது பஸ் ரிப்பேராகி விடுகிறது. அன்றிரவு விக்ரம் பிரபு
மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுன் அமலாகிறது. எனவே, அனைவரும் மேலும் சில நாட்கள் தங்குகின்றனர். சுஷ்மிதா பட்டுடன் தனியாக பேச விக்ரம் பிரபு முயற்சிக்கிறார். அவருடன் பேசுவதை தவிர்க்கும் சுஷ்மிதா பட், அன்றிரவு வீட்டைவிட்டு ஓடுகிறார். பிறகு விக்ரம் பிரபு திருமணம் நடந்ததா? சுஷ்மிதா பட் வீடு திரும்பி னாரா என்பது மீதி கதை. நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் பேசத் தவிக்கும் மாப்பிள்ளையாக, இயல்பாக நடித்து அசத்தியுள்ளார் விக்ரம் பிரபு. பெண் வீட்டாரை தனது குடும்பத்தினர் ஏளனமாகப் பேச, அதை லாவகமாகச் சமாளித்து கையாள்வதை சிறப்பாக செய்துள்ளார். ஹீரோயின் சுஷ்மிதா பட் என்றாலும், அவரது தங்கையாக வரும் மீனாட்சி தினேஷ் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.
ஒரு காட்சியில் எம்எல்ஏவாக வரும் சத்யராஜ், வழக்கமான ஸ்டைலில் கலக்கியுள்ளார். தவிர ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ், முருகானந்தம், மைக் செட் மோகன், யாசர் ஆகியோர் அருமையாக நடித்திருக்கின்றனர்.மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு, ஷான் ரோல் டனின் பின்னணி இசை, பரத் விக்ரமனின் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம் சேர்த்துள்ளன. கலகலப்பான குடும்பக்கதையை எழுதி இயக்கிய சண்முகப் பிரியன், படத்தில் எல்லோரையும் பேச வைத்திருப்பது கதையின் அழுத்தத்தை குறைக்கிறது. எனினும், லாஜிக் பற்றி கவலைப்படாமல் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கின்றனர்.