திண்டுக்கல்லில் உள்ள மலைப்பகுதியில் இந்துக்கள் வசிக்கும் இடமாக சுப்ரமணியபுரம், கிறிஸ்தவர்கள் வசிக்கும் இடமாக யோக்கோபுரம் ஆகிய கிராமங்கள் இருக்கின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு இடையே அடிக்கடி மதங்கள் சம்பந்தப்பட்ட மோதல்கள் ஏற்படுவது வாடிக்கை. இவ்விரு கிராமங்களை சேர்ந்த நபர்கள் அடுத்தடுத்து திருமணம் செய்ய தயாராகும் நேரத்தில், விமல் மற்றும் சாயாதேவியால் அவர்கள் கொல்லப்படுகின்றனர். பிறகு இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் தலைமையிலான போலீஸ் படை விசாரித்து கண்டுபிடிக்கும் போது, விமல் மற்றும் சாயாதேவி பற்றிய உண்மை தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அடுத்த கொலையை தடுத்து நிறுத்தினார் களா? விமல், சாயாதேவி யார் என்பது படத்தின் மீதி கதையாகும்.
கதைக்கும், கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, இயல்பாக நடித்துள்ளார் விமல். சாயாதேவிக்கும், அவருக்குமான காதல் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்அவுட் ஆகியுள்ளது. ஃபாதர் வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். போலீஸ் அதிகாரி இசக்கி கார்வண்ணன் விறுவிறுப்பாக விசாரணை நடத்தியுள்ளார். சேஷ்விதாவின் நடனமும், நடிப்பும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் வில்லத்தனத்தில் அசத்தியுள்ளார். கான்ஸ்டபிள் ‘காதல்’ சுகுமாரின் குணச்சித்திரமும், ஆர்ட் டைரக்டர் வீரசமரின் குடிகார பேச்சும் யதார்த்தம். மற்றும் கலையரசன், அருள்தாஸ், ரஞ்சனி, மனோஜ் குமார், ஆதிரா, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், கூல் சுரேஷ், ஆறு பாலா, ‘களவாணி’ கலை ஆகியோரும் நிறைவாக நடித்துள்ளனர். மலை கிராமங்களின் அழகை கண்முன் கொண்டு வந்த எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும், தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசையும் சிறப்பு. மதங்கள் சம்பந்தமான பிரச்னைகளை சொன்ன இயக்குனர் இசக்கி கார்வண்ணன், பல காட்சிகளில் பிரசார பாணியில் பாடம் நடத்தியிருப்பது மனதை நெருடுகிறது.