நடுக்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை பெறுவதற்காக, ஒரு லட்சம் கோடி ரூபாயை சட்ட விரோதமாக கைமாற்ற இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ஜிம் சர்ப் திட்டமிடுகிறார். இதற்காக, செய்யாத குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டு ெஜயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி நாகார்ஜூனாவின் சட்டவிரோத உதவியை நாடும் அவர், நாகார்ஜூனாவை விடுதலை செய்ய உதவுகிறார். சட்டவிரோத பண பரிவர்த்தனைக்காக, பல்வேறு இடங்களில் பிச்சை எடுக்கும் படிப்பறிவு இல்லாத தனுஷ் உள்பட 4 பிச்சைக்காரர்களை ஜிம் சர்ப்பின் பினாமிகளாக நாகார்ஜூனா தேர்வு செய்து, அவர்களின் பெயரில் தொழில் நிறுவனங்களை தொடங்குகிறார். கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய பரிவர்த்தனை முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட பிச்சைக்காரர்கள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த வரிசையில் தனுஷை கொல்ல முயற்சிக்கும்போது அவர் தப்பித்துவிடுகிறார். அப்போது ராஷ்மிகா மந்தனாவின் நட்பு கிடைக்கிறது. பண பரிவர்த்தனை தடைபட்டதால் ஆவேசப்படும் ஜிம் சர்ப், தனுஷை உயிருடன் பிடிக்க ஆட்களை அனுப்புகிறார். நாகார்ஜூனா தலைமையில் தனுஷை தேடும் குழுவினருடன் நடக்கும் மோதலில் நாகார்ஜூனா என்ன ஆனார், தனுஷ் கிடைத்தாரா, எரிவாயு திட்டம் என்ன ஆனது என்பது மீதி கதை. இன்னொரு தேசிய விருதுக்கு அடித்தளமாக அமைந்த பிச்சைக்காரன் கேரக்டருக்கு 100 சதவீதம் நியாயம் செய்துள்ளார் தனுஷ்.
அபார நடிப்பால் ரசிகர்களை ஈர்க்கிறார். ‘போய் வா நண்பா’ பாடல் காட்சியில் அவரது நடனம் ரசிகர்களையும் ஆட வைக்கிறது. மனைவி சுனைனா மற்றும் மகள் மீது உயிரையே வைத்திருக்கும் சிபிஐ அதிகாரி நாகார்ஜூனா, தனது அனுபவ நடிப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். ராஷ்மிகா மந்தனா மாறுபட்ட கேரக்டரில் அற்புதமாக நடித்துள்ளார். அவரும், தனுஷும் குப்பைமேட்டில் பேசும் காட்சி தரமானது. ஜிம் சர்ப்பின் வில்லத்தனம் கவனத்தை ஈர்க்கிறது. பிச்சைக்காரர் கே.பாக்யராஜ் மற்றும் நாசர், ஷாயாஜி ஷிண்டே, அழகம்பெருமாள், சுனைனா, தலிப் தஹில், பகவதி பெருமாள் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். நிகேத் பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவும், தேவி பிரசாத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்துக்கு மிகப்பெரிய பலம். மக்கள் சேவைக்கான விஷயங்களில் சில பெரும்புள்ளிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையே நடக்கும் மறைமுக பேரத்தை வெட்டவெளிச்சமாக்கிய இயக்குனர் சேகர் கம்முலாவின் தைரியம் பாராட்டத்தக்கது. ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் நெருடுகிறது. படத்தின் நீளத்தை அரை மணி நேரமாவது குறைத்திருக்க வேண்டும்.