பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றுகிறார், பிரித்திவிராஜ் ராமலிங்கம். அங்கு கன்னத்தில் அறை வாங்கியதால் வேதனைக்குள்ளான அவர், அளவுக்கதிகமாக குடித்துவிட்டு, முன்னாள் கல்லூரி தோழியும், ‘ஆடுகளம்’ முருகதாஸின் மனைவியுமான மைனா நந்தினியின் வீட்டுக்கு சென்று பிரச்னை செய்கிறார். பிறகு குடிகார ஆட்டோ டிரைவர் காளி வெங்கட்டுடன் சேர்ந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கிறார். போலீஸ் அவரை ஸ்டேஷனில் செமத்தியாக கவனிக்க, வாக்கிடாக்கியை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். இந்நிலையில் ஒரு சிறுமி காணாமல் போக, இச்சம்பவம் பிரித்திவிராஜ் ராமலிங்கத்தின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. கதை எழுதி தயாரித்து, குடிகாரனின் மேனரிசங்களை பிரித்திவிராஜ் ராமலிங்கம் அட்டகாசமாக வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
மைனா நந்தினி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், காளி வெங்கட், பகவதி பெருமாள், போஸ் வெங்கட், ஆர்ட் டைரக்டர் ஆர்.கே.விஜய் முருகன், ஜீவா சுப்பிரமணியம், வேல.ராமமூர்த்தி, பாரத் நெல்லையப்பன் ஆகியோர், அந்தந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். இன்டர்கட் ஷாட்டே இல்லாமல், முழுநீள படத்தை போரடிக்காமல் இயக்கிய என்.அரவிந்தன் துணிச்சலுக்கு பாராட்டு. கோவிந்த் வசந்தாவின் இசை, சிறப்பு. ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார் மதன் குணதேவ். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் குடிகார வாழ்க்கையை வைத்து பூர்ணா ஜெஸ் மைக்கேல் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். யதார்த்தமான கதை விரும்பிகளை படம் கவரும்.