வள்ளுவநாட்டில் சிறுவர், சிறுமியருக்கு தமிழ்க் கலாச்சாரங்களை கற்றுக்கொடுக்கும் திருவள்ளுவர், ஒன்றேமுக்கால் அடி கொண்ட செய்யுள்களை ஓலைச்சுவடியில் எழுதுகிறார். இந்நிலையில், மக்களுக்கு எதிரான கொடுங்கோல் ஆட்சியை ஒழிக்க திருவள்ளுவர் உதவும்படி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். போரையும், உயிர் பலிகளையும் விரும்பாத திருவள்ளுவர், நல்லாட்சி தருபவர்களை அரியணையில் அமர்த்த ஆலோசனை வழங்குகிறார். இறுதியில், மதுரை தமிழ்ச் சங்கம் அவரது திருக்குறளை அரங்கேற்ற அனுமதித்ததா என்பது மீதி கதை. திருவள்ளுவர், வாசுகியாக திரையில் வாழ்ந்திருக்கும் கலைச்சோழன், தனலட்சுமி ஜோடிக்கு பாராட்டுகள். இருவரும் கேரக்டரை உணர்ந்து மிக நேர்த்தியாக நடித்துள்ளனர். பரிதியாக குணா பாபு, பவளக்கொடியாக பாடினி குமார், மாடத்தியாக சுகன்யா, சங்குமாறனாக சந்துரு, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக சுப்பிரமணியம் சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாராக கொட்டாச்சி, குமணனாக அரவிந்த் ஆண்டவர், நன்னனாக கார்த்தி, பரிதியின் தோழனாக யாசர் உள்பட பலர், அந்தந்த கேரக்டருக்குப் பொருந்தி, மிக இயல்பாக நடித்துள்ளனர்.
2,000 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையைக் கண்முன் கொண்டு வந்துள்ள கலை இயக்குனர் சுரேஷ் கல்லேரி, ஆடை வடிவமைப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள செம்பூர் கே.ஜெயராஜ், காட்சிகளை உண்மைக்கு நெருக்கமாக ஒளிப்பதிவு செய்துள்ள எட்வின் சகாய் ஆகியோரின் பணிகள் பாராட்டுக்குரியவை. இளையராஜாவின் பின்னணி இசை, படத்தின் உயிர்நாடி. அவரே எழுதியுள்ள பாடல் வரிகள் அக்காலத்தை உணர்த்துகின்றன. திருவள்ளுவரின் வாழ்க்கையை யதார்த்தமாக இயக்கியுள்ள ஏ.ஜெ.பாலகிருஷ்ணன், தமிழ்ப் படைப்பாளி ஒருவருக்கு சிறப்பு சேர்த்துள்ளார். மெதுவாக நகரும் காட்சிகளை துரிதப்படுத்தி இருக்கலாம்.