சென்னை: தமிழில் ‘அன்பு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாலா. தொடர்ந்து ‘காதல் கிசுகிசு’, ‘கலிங்கா’, ‘வீரம்’, ‘அண்ணாத்த’ உள்பட பல படங்களில் நடித்தார். பிறகு மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்து, கேரளாவிலேயே செட்டிலாகிவிட்டார். கடந்த 2016ல் பாடகி அம்ருதா சுரேஷை காதல் திருமணம் செய்த பாலா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். இவர்களுக்கு 12 வயதில் அவந்திகா என்ற மகள் இருக்கிறார். இதையடுத்து, கடந்த 2021ல் டாக்டர் எலிசபெத் உதயன் என்பவரை பாலா காதல் திருமணம் செய்தார். இந்நிலையில், பாலா மகள் அவந்திகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘என் தந்தை என்னை மிகவும் நேசிப்பதாகவும், என்னை மிஸ் செய்வதாகவும், எனக்கு நிறைய பரிசுப்பொருள் வாங்கி கொடுத்ததாகவும் பேட்டிகளில் சொல்லி வருகிறார். ஆனால், இதில் எதுவும் உண்மையே இல்லை. என் தந்தையை நேசிக்க எனக்கு ஒரு சின்ன காரணம் கூட இல்லை. அவரை நினைக்கும்போது என்னையும், என் குடும்பத்தையும் செய்த டார்ச்சர், குடித்துவிட்டு என் அம்மாவை அடித்தது கண்முன் வருகிறது. அந்த நேரத்தில் என்னால் என் அம்மாவுக்கு உதவி செய்ய முடியவில்லை. ஆனால், அந்த வலியை நான் இப்போதுதான் உணர்கிறேன். எனது குடும்பத்தினர் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கின்றனர். எனவே, தயவுசெய்து என் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள்’ என்று பேசியிருந்தார்.
இதை தொடர்ந்து பாலா வெளியிட்டுள்ள வீடியோவில், ‘மகளே, முதலில் என்னை அப்பா என்று அழைத்ததற்கு நன்றி. நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. ஒருவன் தனது மகளுடன் வாக்குவாதம் செய்தால், அவன் மனிதனே கிடையாது. உனக்கு 3 வயது இருக்கும்போது பாட்டில் வீச முயன்றதாகவும், 5 நாட்கள் பட்டினி போட்டதாகவும் கூறியிருக்கிறாய். உன்னுடன் வாக்குவாதம் செய்தால் நான் வெல்லலாம். நீ வெற்றிபெற வேண்டும் என்பதற்காக உன்னிடம் சரணடைகிறேன். இனி நான் உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன். நீ 5 மாத கருவாக வயிற்றில் இருக்கும்போதே உனக்கு அவந்திகா என்று பெயர் வைத்து அழகு பார்த்தவன் நான். உனது சின்னச்சின்ன அசைவுகளை ரசித்து மகிழ்ந்தேன். நீ எப்போதுமே எனக்கு குழந்தைதான். நன்கு படித்து வலிமையானவளாக வளர வாழ்த்துகள் மகளே’ என்று உருக்கமாகப் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.