விமர்சனம்
அக்ஷய கந்த அமுதன், நாயகன் வெற்றியை காதலிக்கிறார். வீட்டை விட்டு ஓடும் இருவரும் காரில் நள்ளிரவில் பயணிக்கிறார்கள். தனது தங்கையை காணவில்லை என்று வில்லன் முருகன் (டைரக்டர்) தேட ஆரம்பிக்கிறார். இந்த நள்ளிரவுக்குள் என்னென்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்புடன் சொல்ல முயன்றுள்ளது இப்படம். வெற்றி படம் முழுக்க முகத்தை இறுக்கமாக வைத்தபடி வருகிறார். நல்ல கதைகளை தேர்வு செய்து, வித்தியாசமான படங்களில் நடிப்பது வெற்றியின் பார்முலா. இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் இதை அவர் தேர்வு செய்திருக்கிறார். பகல் அறியாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஹீரோ சந்திக்கும் பிரச்னைகளை அவர் வெளிப்படுத்தியுள்ள விதம் குறையேதும் இல்லாமல் இருக்கிறது. நாயகியாக புதுமுகம் அக்ஷயா கந்த அமுதன், சரியான தேர்வு. அதிகம் பேசாமலே உணர்வுகளால் நடித்து அசத்துகிறார்.
வெற்றிக்கும் அவருக்குமான ஜோடி பொருத்தம் கச்சிதம். வில்லனாக வரும் டைரக்டர் முருகன், நடிப்பில் ஏமாற்றவில்லை. அதே சமயம், இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை. சாப்ளின் பாலு, குணச்சித்திர கேரக்டரில் வந்து மனதை தொடுகிறார். படத்துக்கு பிளஸ்ஸாக அமைவது அபிலாஷின் ஒளிப்பதிவுதான். இரவு நேர காட்சிகளை இயல்பாக கொடுத்திருக்கிறார். படம் நம்மிடையே கடத்த விரும்பும் விஷயங்களை துல்லியமாக தருகிறார். விவேக் சரோவின் பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது. குரு பிரதீப்பின் படத்தொகுப்பு படத்தை சறுக்க வைத்துவிடுகிறது.
கதை சொல்லும் விஷயத்திலும் காமெடி என்ற பெயரில் வரும் காட்சிகளும் படத்துடன் கொஞ்சமும் ஒட்டவில்லை. திரைக்கதையில் இயக்குனர் முருகன் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் பகலறியான் பளிச்சிட்டிருப்பான்.