போலீஸ் அதிகாரி ஜெய்குமார் தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கண்டுபிடிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது. சுடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்களை எடுத்துவிட்டு, அக்குழிகளில் போதைப்பொருட்களைப் பதுக்கி வைக்கும் ஒரு கும்பலைப் பற்றிய தகவலையறிந்த போலீசார் அதிர்ச்சி அடைகின்றனர். இந்தவேளையில், சாத்தானை வழிபடும் ஒரு கும்பல் விசித்திர பூஜைகள் செய்து மனிதர்களை நரபலி கொடுப்பதை ஜெய்குமார் கண்டுபிடிக்கிறார். இது பற்றி விசாரிக்கும்போது, அந்தக் கும்பலின் பின்னணி மற்றும் அவர்களின் மர்ம மரணம் குறித்த தகவல்கள் தெரியவருகிறது. உயரதிகாரி தடுத்தும் இந்த மர்மம் குறித்த விசாரணையில் தீவிரம் காட்டும் ஜெய்குமார், அந்தக் கும்பலையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும் கண்டுபிடிக்க களத்தில் குதிக்கும்போது, அவரைச்சுற்றி சில மர்ம சம்பவங்கள் நடக்கின்றன. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. மர்ம சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், அடுத்த பாகத்துக்கு லீட் கொடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவ மத போதகராக 2 வேடங்களில் நாசர், உயரதிகாரி தலைவாசல் விஜய் மற்றும் போலீஸ் அதிகாரிகளாக ஜெய்குமார், ஸ்வயம் சித்தா மற்றும் வினோத் கிஷன், வினோதினி வைத்தியநாதன், அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் ஆகியோர் இயல்பான நடிப்பின் மூலமாக படத்துக்கு பலம் சேர்த்து இருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் கிரி மர்பி, மாறுபட்ட லொகேஷன்களில் தனது கேமரா மூலம் மாயாஜாலம் செய்திருக்கிறார். கலை இயக்குனர் தோட்டா தரணியின் அரங்க அமைப்பு மற்றும் விஎஃப்எஸ் காட்சிகள் படத்துக்கு மிகப்பெரிய பலம். ‘அக்காலி’ என்பது பஞ்சாப்பில் சில பகுதிகளில் பேசப்பட்டு வரும் வழக்குமொழி. அதாவது, ‘இறப்பே இல்லாத மனிதன்’ என்று அர்த்தம். சாத்தான்களை வழிபட்டு நரபலி கொடுப்பவர்களை மையப்படுத்திய வித்தியாசமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லரான இதை முகமது ஆசிப் ஹமீத் எழுதி இயக்கியுள்ளார். தவிர, பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். சாத்தான்களை எதற்காக வழிபடுகின்றனர் என்பதை விரிவாகச் சொல்வதும், பல வருடங்களுக்கு முன்பு நடந்த வழக்கை தற்போது விசாரிக்கும் பாணியும் சற்று நிமிர வைக்கிறது. பல காட்சிகள் நீளமாக இருப்பதும், எல்லா கேரக்டரும் பேசிக்கொண்டே இருப்பதும் சோர்வடைய வைக்கிறது. எடிட்டிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம்.