விமர்சனம்
நல்லவனை காதல் திருமணம் செய்ய வேண்டும் என்பது அர்த்தனா பினுவின் லட்சியம். அவரது தந்தை ஆனந்தராஜ், தனது மகளுக்கு அக்மார்க் அயோக்கியனையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது லட்சியம். மிகவும் நல்லவரான நகுலை அர்த்தனா பினு விரும்புகிறார். ஆனந்தராஜின் பேச்சை ஆமோதிப்பது போல் நடித்து, திருமண ஏற்பாடு நடக்கிறது. இந்நிலையில் நகுல் வாஸ்கோடகாமா சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு கெட்டவர்களுக்கும், நல்லவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுகிறது. தர்மம் வென்றதா? அதர்மம் தலைதூக்கியதா என்பது மீதி கதை. நன்மைகள் குறைந்து, தீமைகள் பெருகுவதை கலிகாலம் என்பார்கள். இனிவரும் காலத்தில் இந்நிலை நீடித்தால், இந்த நாடு எப்படி மாறியிருக்கும் என்ற அதீத கற்பனைதான் படம். இதை முதலில் தெளிவாகப் புரிந்துகொண்டால், முழு படத்தையும் பார்க்க முடியும். நல்லவர்கள் அனைவரும் நன்மை செய்ததற்காக தண்டனை பெற்று சிறையில் வாடுகின்றனர். தீயவர்கள் எல்லாம் சிறைக்கு வெளியில் இருந்து அநியாயம் செய்கின்றனர்.
இதில் சிக்கித்தவிக்கும் மனிதர்களின் சித்தரிப்பும், நாட்டு நடப்பும் எப்படி இருக்கும் என்று, லாஜிக்கை மீறிய மேஜிக்காக நிகழ்த்தியுள்ளார், புது இயக்குனர் ஆர்ஜிகே. வாஸ்கோடகாமா சிறையில் அடைக்கப்பட்ட நல்லவர்களுக்கும், அவர்களை எல்லாம் கெட்டவர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் சிறைத்துறை அதிகாரிகள் கொண்ட அரசாங்கத்துக்கும் நடக்கும் போராட்டத்தையே காமெடி கலந்து சொல்லியிருக்கின்றனர். சாக்லெட் பாய் நகுல், கேரக்டரை உணர்ந்து சுறுசுறுப்பாக நடித்துள்ளார். அவரும், அர்த்தனா பினுவும் பொருத்தமான ஜோடி. மாறுபட்ட இரட்டை வேடங்களில் கே.எஸ்.ரவிகுமார், வில்லனாக வம்சி கிருஷ்ணா மற்றும் ஆனந்தராஜ், பிரேம் குமார், முனீஷ்காந்த், செல் முருகன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதன்பாப், ஆர்.எஸ்.சிவாஜி, படவா கோபி ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர். சதீஷ் குமார் என்.எஸ் ஒளிப்பதிவும், அருண் என்.வி இசையும் கதையின் நகர்வுக்கு ஈடுகொடுத்துள்ளன. இனிவரும் காலத்தில் கெட்டவர்கள் நிறைந்த உலகில், நல்லவர்களாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை காமெடியாகவே சொல்லிவிட்டதால், சிரிக்க முடிகிறதே தவிர, கதையின் கருத்து சிந்தையில் பதியவில்லை.