“28 டேய்ஸ் லேட்டர் ” ( 2002) மற்றும் “28 வீக்ஸ் லேட்டர் ” (2007) படங்களைத் தொடர்ந்து “28 இயர்ஸ் லேட்டர்” எனும் மூன்றாவது பாகம் இப்போது திரைக்கு வந்துள்ளது. டானி பாய்லே இயக்கத்தில் அலெக்ஸ் கார்லண்ட் திரைக்கதையில் வெளியாகியிருக்கும் இப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ், டிஎன்ஏ பிலிம்ஸ் மற்றும் டெசிபல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க இப்படத்தை சோனி பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது.
உலகமே வைரஸ் தாக்குதலுக்குட்பட்டு ஜோம்பிகளின் இருப்பிடமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதில் தப்பிக்கும் மனிதர்கள் ஆங்காங்கே கடல் சூழ்ந்த தீவுகளில் உயிர் பிழைத்து வாழ்கிறார்கள். குறிப்பிட்ட வயது வருகையில் தீவில் இருக்கும் சிறுவர்களை பிரதான இடத்தில் இருக்கும் ஜோம்பிகளை வேட்டையாடி அழிக்க பயிற்சி கொடுக்க அழைத்து செல்வது வழக்கம். அப்படித்தான் ஸ்பைக் (ஆல்ஃபி வில்லியம்ஸ்) என்னும் சிறுவன் அவனது அப்பா ஜேமி ( ஆரன் டெய்லர் ஜான்சன்) உடன் ஜோம்பி வேட்டைக்குச் செல்கிறான்.
மெதுவாக துரத்தும் ஜோம்பி, வேகமான ஜோம்பிகள், ஆல்பா என மூன்று விதமான ஜோம்பிகள் இருக்கின்றன. இவற்றில் சிலவற்றை வேட்டையாடிவிட்டு , ஆல்பா ஜோம்பியிடம் இருந்து தப்பித்து மீண்டும் தீவுக்கு திரும்புகிறார்கள் அப்பாவும் மகனும். பிரதான நிலத்தில் ஜோம்பிகளுக்கு இடையே ஒரு மருத்துவர் இருப்பது தெரிந்து , தனது அம்மா ஐலாவின் (ஜோடி கோமர் ) நோய்க்கு சிகிச்சை கிடைக்கும் என முடிவு செய்து அம்மாவைக் கூட்டிக் கொண்டு செல்கிறான் ஸ்பைக். அங்கே ஆபத்தான பயணம், தேடல் , என தன் அம்மாவை காப்பாற்றினானா ? இல்லையா? ஸ்பைக் என்பது மீதிக் கதை.
கதையின் பலம் சிறுவன் அல்ஃபி வில்லியம்ஸ்தான் . அவர் முகத்தில் அவ்வளவு உணர்வுகள். முக்கிய முடிவுகள் எடுப்பது, அம்மாவை பாதுகாத்து அழைத்துச் செல்வது என சபாஷ் குட்டிப் பையன். ஆரன் டெய்லர் ஜான்சன், ஜோடி கோமர், ரால்ஃப் ஃபியன்னெஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் திரைக்கதைக்கு உழைத்திருக்கிறார்கள்.
ஆண்டனி டாட் மென்டல் ஒளிப்பதிவு காடுகளும் , வயல்வெளிகளும் நிறைந்த பிரதான நிலம் ஒரு பக்கம், நீரால் சூழ்ந்த தீவு ஒரு பக்கம், அதில் வாழும் மக்களின் வாழ்வியல் என நம்மை விஸ்வலுக்குள் கடத்துகிறது. யங் ஃபாதர்ஸ் இசை ஜோம்பி விரட்டும் இடங்களில் நம்மையும் மிரள வைத்திருக்கிறது. இறுதியில் வரும் கிளைமாக்ஸ் இசை புது உணர்வை கடத்துகிறது.
பின் பகுதியில் கிளைமாக்ஸ் முன்பு வரும் நீளமான அரை மணி நேரத்தை குறைத்திருக்கலாம். அட்வென்ச்சர் கதைக்களமாக இருக்க வேண்டிய சூழல் மாறி திடீரென அம்மா சென்டிமென்ட், குழந்தை சென்டிமென்ட் என எமோஷனல் மோடுக்கு மாறுகிறது. மொத்தத்தில் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகள் , ஏலியன்கள் , மான்ஸ்ட்டர்கள், ஜந்துக்கள், ஜோம்பிகள் படங்கள் எங்களுக்கு பிடிக்கும் என்போர் இந்தப் படத்தையும் தவறாமல் பார்க்கலாம்.