சென்னையிலுள்ள ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் கணக்காளராக பணியாற்றும் சரத்குமார், தனது மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசிக்கிறார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அவர்கள், சொந்த வீடு வாங்கும் கனவை நெஞ்சில் சுமந்து, அதற்கான பணத்தை சேமித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்தடுத்த எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத செலவுகளால் சேமிப்பு மொத்தமும் கரைகிறது. இறுதியில் அவர்களின் கனவு வென்றதா என்பது மீதி கதை.
நடுத்தர குடும்ப தலைவராக இயல்பாக வாழ்ந்து, அமைதி யான நடிப்பில் சரத்குமார் அசத்தியுள்ளார். சித்தார்த்திடம், ‘என்னை மாதிரி ஆயிடாதப்பா’ என்று கண்கலங்கும் காட்சி உருக்கம். தொடர்ந்து தோல்வி அடைந்தாலும், ‘ஜெயிச்சிருவேன் பா’ என்று சொல்லும் சித்தார்த், சராசரி இளைஞர்களை கண்முன் நிறுத்தி, நடிப்பில் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது காதலியாக வரும் சைத்ரா ஜே.ஆச்சார், வெகுஇயல்பாக நடித்துள்ளார்.
மீதா ரகுநாத்தின் அட்டகாசமான நடிப்புக்கு இப்படம் ஒரு சான்று. குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் தேவயானி சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு யோகி பாபு கலகலக்க வைக்கிறார். சித்தார்த்தை மட்டம் தட்டும் விவேக் பிரசன்னாவும் கவனத்தை ஈர்க்கிறார். யதார்த்தமான காட்சிகளுக்கு பி.தினேஷ் கிருஷ்ணன், ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஆகியோரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. எடிட்டர் கணேஷ் சிவா, கலை இயக்குனர் என்.வினோத் ராஜ்குமார் ஆகியோரின் பணிகளும் குறிப்பிடத்தக்கவை. பின்னணி இசையிலும், பாடல்
களிலும் முத்திரை பதித்துள்ளார், பாடகி பாம்பே ஜெயயின் மகன் அம்ரித் ராம்நாத். ‘வீடு என்பது ஒரு மரியாதை’ என்று சொன்ன இயக்குனர் கணேஷ், நிறைய காட்சிகளை வழக்கத்தை விட மாற்றி யோசித்திருக்கலாம்.