சென்னை: பண்டிகை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களின் திரைப்படங்களை தியேட்டரில் பார்க்க திரண்டுவிடுவார்கள். வரும் தீபாவளி பண்டிகைக்கு சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவின் நடித்த படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் ‘ரங்கூன்’ ராஜ்குமார் பெரியசாமி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம், ‘அமரன்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், முகுந்தன் என்ற ராணுவ மேஜர் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வருகிறது.
ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத் குமார், ராவ் ரமேஷ் நடித்துள்ள படம், ‘பிரதர்’. அக்கா, தம்பி பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை ராஜேஷ்.எம் இயக்கியுள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம், ‘லக்கி பாஸ்கர்’. இது பான் இந்தியா படம். மீனாட்சி சவுத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடித்துள்ள ‘ப்ளடி பெக்கர்’ படமும் தீபாவளிக்கு வருகிறது. நெல்சன் திலீப்குமார் உதவியாளர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார். கவினுக்கு ஜோடி இல்லை.