சென்னை: விசுவநாத் ஹீரோவாக நடித்து எழுதி இயக்கும் படம் ‘காந்தகம்’. சமிதா, ‘சித்தா’ வில்லன் தர்ஷன் நடிக்கின்றனர். ராகவ ஹரி கேசவா திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்கிறார். கிங் ஸ்கார்பியன் புரொடக்ஷன் தயாரிக்கிறது. படம் குறித்து விசுவநாத் கூறுகையில், ‘5ம் நூற்றாண்டில் நடந்த ஒரு வரலாற்று தகவலை மையமாக வைத்து, மிகச்சிறப்பான கிரைம் திரில்லர் படமாக இதை உருவாக்குகிறேன். நிகழ்கால சம்பவங்களுக்கும், 5ம் நூற்றாண்டு சம்பவங்களுக்கும் என்னென்ன தொடர்பு என்பதை நேர்த்தியாகவும், ஸ்டைலிஷாகவும் சொல்கிறேன்.
சிக்கல் நிறைந்த கதை, இதுவரை யாரும் அமைக்காத திரைக்கதை, விறுவிறுப்பான மற்றும் பரபரப்பான காட்சிகள் என்று, அனைவரையும் கவரும் வகையில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கொடைக்கானல், மூணாறு ஆகிய பகுதிகளை தொடர்ந்து மலேசியாவில் நடக்கிறது. நான் இயக்கியுள்ள ‘மலைகளின் இளவரசி’ என்ற படம் விரைவில் திரைக்கு கொண்டு வரப்படுகிறது’ என்றார்.