சூரரைப் போற்று - விமர்சனம்
11/12/2020 11:52:49 AM
Soorarai Pottru is a 2020 Indian Tamil-language action drama film directed by Sudha Kongara and produced by Suriya and Guneet Monga, under their respective banners 2D Entertainment and Sikhya Entertainment.
2டி என் டெர்டெயின்மென்ட் மற்றும் சிக்யா என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கதில் சூர்யா , அபர்ணா பாலமுரளி,
2டி என் டெர்டெயின்மென்ட் மற்றும் சிக்யா என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கதில் சூர்யா , அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, மோகன் பாபு, கருணாஸ் , விவேக் பிரசன்னா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சூரரைப் போற்று‘.
’ நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக் கனியாக இருந்த விமானப் போக்குவரத்தை பல போராட்டங்களுக்குப் பிறகு சாத்தியமாக்கிய ஏர் டெக்கானின் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் படம்’.
’ மதுரை சோழவந்தானைச் சேர்ந்தவர் நெடுமாறன்(சூர்யா). பணக்கார மக்களுக்கு மட்டுமே சாத்தியப்பட்ட விமானப் போக்குவரத்தை ஏழை எளிய மக்களுக்கும் மேலும் பேருந்து கூட பெரிதாக இல்லாத கிராமங்களுக்கும் சாத்தியப்படுத்த அரும்பாடு படுகிறார். பேட்டரி கார் வாங்கி விடவே ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் போடும் அரசியல் உலகில் விமானம் அதிலும் ஏழைகளின் கனவை நினைவாக்க நினைக்கும் ஒருவரின் கனவு அவ்வளவு சுலபமாக நடந்துவிடுமா என்ன?. அதிகாரத்தின் அழுத்தம், ஏற்கனவே இந்தத் தொழிலில் கொடி கட்டிப் பறப்போர் என பலரும் நெடுமாறனின் அத்தனை செயல்பாடுகளிலும் முட்டுக் கட்டைப் போடுகிறார்கள். அதையெல்லாம் உடைத்து கனவை நிறைவேற்றினாரா இல்லையா என்பது மீதிக்கதை.
கோபிநாத்தின் வரலாறு கொஞ்சம் பெரிது, அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பதுதான் படத்திற்கு மேலும் சிறப்பு. எங்கும் திசை திரும்பாமல் கதை நாயகனின் தோளில் மிக அற்புதமாக நகர்கிறது. முந்தைய படங்களிலும் சரி , இந்தப் படத்திலும் சரி ஹீரோக்களை தனி அந்தஸ்த்துடன் காட்டுவதில் மேன்மேலும் மெருகேறி வருகிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
படத்தின் மொத்த நம்பிக்கையும் சூர்யாதான் அதை உள்வாங்கிக் கொண்டு கதைக்குத் தேவையான நடிப்பை அளவாகவும், அருமையாகவும் வழங்கியிருக்கிறார். விமான நிலையத்தில் டிக்கெட்டின் விலை மிகக் குறைவு என கெஞ்சி மன்றாடுவதாகட்டும், ’’ஹேய்! வானம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா’’ எனக் கேட்டு கெத்து காட்டுவதாகட்டும் நிச்சயம் வரும் வருடங்களில் சிறந்த நடிப்பிற்கான விருது பட்டியல்கள் அத்தனையிலும் சூர்யாவின் பெயர் இருக்கும்.
அபர்ணா பலமுரளி … கனவு மனைவி என இளைஞர்கள் எதிர்பார்க்கும் அத்தனைக்கும் பொருத்தமானவராக ஜொலிக்கிறார். ‘நீ கசை வாங்கியிருந்தாதான் விஷம் வெச்சிருப்பேன்‘ என சாப்பாடு ஊட்டி விடுவதும், ‘இப்போ கல்யாணம் வேண்டாம்‘ என கெத்தாக நடந்து வருவதும், வெய்யோன் சில்லி கில்லிதான்.
படம் முழுக்க உணர்வுப்பூர்வமான காட்சிகள் பின்னி பிணைந்து இழையோட அதற்கு ஆதரவாக நிற்கிறார்கள் ஊர்வசி, காளி வெங்கட், விவேக் பிரசன்னா, உள்ளிட்டோர். அலட்டிக்கொள்ளாத தொழிலதிபராக தமிழுக்கு நல்வரவு பரேஷ் ராவல்.
மதுரை மண் வாசனை தழுவ, யானை மலை, சோழவந்தான் என நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. மேலும் படம் முழுக்க அப்பிகொண்டு பயணிக்கும் செபியா டோன் காட்சிகளுக்கு மேலும் அழகு கூட்டுகிறது. குறிப்பாக பாடல் காட்சிகளில் எங்கேயோ கூட்டிச் செல்கிறது. அதற்கு இன்னும் ரம்மியம் சேர்த்திருக்கிறது ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும்.
ஒரு சில கதாபாத்திரங்களை தில்லாகவே அமைத்து குறியீடுகள் வைத்தமை சபாஷ் ரகம். குறிப்பாக கலர் சட்டை , தொப்பி சகிதமாக வரும் பாலைய்யா பாத்திரம், ஒருவேளை இந்தப்படம் திரையரங்கில் வெளியாகியிருந்தால் அந்தக் காட்சிக்கு நிச்சயம் ஒரு பெரிய காமெடி கரகோஷம் கிடைத்திருக்கும். மிகச்சில இடங்களில் காட்சிகள் கொஞ்சம் நீளமாகத் தோன்றலாம். ஒருவேளை வீட்டில் இடையூறுகளுக்கு இடையில் பார்ப்பதன் காரணமாகக் கூட இருக்கும்.
மொத்தத்தில் இதுதான் கதை, இதை மட்டுமே சொல்லப் போகிறேன் என திட்டமிட்டு , சரியாகப் பயணித்த விதத்தில் இதுவரை வெளியான ஓடிடி படங்களிலேயே சிறந்த படம் இந்த ‘சூரரைப் போற்று‘.