யசோதா - திரைவிமர்சனம் - விமர்சனம்
11/21/2022 4:40:06 PM
Samantha, Varalaxmi Sarathkumar, Unni Mukundan, Rao Ramesh, Murali Sharma, Sampath Raj, Shatru
நயன்தாராவின் வாடகைத்தாய் விவகாரம் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது வாடகைத்தாய் தொடர்பாக வெளியாகியுள்ள படம் இது. த
நயன்தாராவின் வாடகைத்தாய் விவகாரம் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது வாடகைத்தாய் தொடர்பாக வெளியாகியுள்ள படம் இது. தனது தங்கையின் ஆபரேஷனுக்கு அதிக பணம் தேவைப்படுவதால், ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் வாடகைத்தாயாக சேருகிறார் சமந்தா. அந்த மருத்துமனையின் தலைவர் வரலட்சுமி, முதன்மை டாக்டர் உன்னி முகுந்தன். சமந்தாவைப் போலவே அங்கு பல கர்ப்பிணிப் பெண்கள் இருக்கின்றனர். ஆனால், அங்கு நடப்பது வாடகைத்தாய் விஷயம் அல்ல, அதற்கும் மேலான ஒரு கொடூரம். அது என்ன? அதிலிருந்து சமந்தா தப்பித்தாரா என்பது கதை.
முற்பகுதியில் வாடகைத்தாய் விவகாரத்தில் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நடவடிக்கை, சில அப்பாவிப் பெண்கள் அவர்கள் வலையில் விழுவது என்று நேர்த்தியாகவும், புதிய பாதையிலும் செல்லும் கதை, பிற்பகுதியில் திசை தெரியாமல் திரிந்து எங்கெங்கோ சென்று, எப்படி எப்படியோ முடிவடைகிறது. நேர்த்தியான ஒரு கதையை உருவாக்கிய இயக்குனர்கள் ஹரி, ஹரீஷ் இருவரும், அதை ஒரு பக்கா கமர்ஷியல் படமாக்க நிறைய சிரமப்பட்டு, அதற்காக நிறைய செலவு செய்து, அந்தக்கால ஜெய்சங்கர் படத்தைப் போல் அரங்குகள் அமைத்து, சமந்தாவைப் பாய்ந்து பாய்ந்து சண்டை போட வைத்து, கடைசியில் கதையைக் கந்தலாக்கி விடுகின்றனர்.
கதைக்கு ஆதாரமாக சில கூகுள் கட்டுரைகளை எண்ட் கார்டில் காட்டி சமாளிக்கின்றனர். ஒன்மேன் ஆர்மியாக படம் முழுவதையும் தாங்கிப் பிடித்திருக்கிறார், சமந்தா. வாடகைத்தாயாக கருணை காட்டுகிறார். டாக்டருடன் காதலில் கசிந்துருகுகிறார். திடீரென்று ஆக்ஷன் அவதாரம் எடுத்து எதிரிகளைப் பொளந்து கட்டுகிறார். வரலட்சுமியின் வில்லித்தனம் ரசிக்க வைக்கிறது. ஆனால், அவரது பிளாஷ்பேக் ‘அழகு கதை’ பயமுறுத்துகிறது. எதிர்பாராத வில்லன், சமந்தாவின் ஆக்ஷன் அவதாரம் ஆகியவற்றை முதலிலேயே கணித்துவிட முடிவதால், படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.
எனினும், உன்னி முகுந்தன் குறித்த திருப்பம் யாரும் எதிர்பாராதது. அவரும் முதலில் அப்பாவியாக நடித்து, கடைசியில் அட... பாவியாக மாறுகிறார். மணிசர்மாவின் பின்னணி இசையும், மைனா எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும் யசோதாவைக் காப்பாற்றுகிறது. வாடகைத்தாயாக வரும் சில பெண்கள் அதுபற்றிய குற்ற உணர்ச்சியோ, வருத்தமோ இல்லாமல் கல்லூரி பெண்களைப் போல் ஜாலியாக இருப்பது மற்றும் மருத்துவமனைக்குத் தேவை குழந்தைகள்தான். பிறகு எதற்காக பெண்களைக் கொல்ல வேண்டும்? அவர்களது உடலைப் பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற லாஜிக் மீறல்கள் இருக்கின்றன.