டாடா - விமர்சனம்
2/18/2023 1:43:51 PM
கவின், அபர்ணா தாஸ் இருவரும் காதலர்கள். முதல் காட்சியிலேயே அபர்ணா தாஸ் தான் கர்ப்பமானதைச் சொல்கிறார். உடனே அதை கலைக்கச் ச
கவின், அபர்ணா தாஸ் இருவரும் காதலர்கள். முதல் காட்சியிலேயே அபர்ணா தாஸ் தான் கர்ப்பமானதைச் சொல்கிறார். உடனே அதை கலைக்கச் சொல்லி கவின் வற்புறுத்த, அபர்ணா தாஸ் மறுக்கிறார். இருவரது குடும்பத்தினரும் அவர்களை ஒதுக்கிவைக்க, காதலர்கள் தனிக்குடித்தனம் செல்கின்றனர். குறைந்த சம்பளத்துக்கு கவின் வேலைக்குச் செல்ல, அபர்ணா தாஸ் குழந்தைப்பேறுக்கு தயாராகிறார்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்படும் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கிறது. கவின் மீதுள்ள ேகாபத்தால், பெற்ற மகனை அதேநாளில் ஆஸ்பத்திரியில் போட்டுவிட்டு, தனது பெற்றோருடன் எஸ்கேப் ஆகிறார் அபர்ணா தாஸ். தாயுமானவனாக மாறிய கவின் தன் மகனை வளர்க்கிறார். அவன் வளர்ந்து பள்ளிக்குச் செல்லும்போது, மீண்டும் அபர்ணா தாசை சந்திக்கிறார் கவின். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
குழந்தையை ஆண்களாலும் வளர்க்க முடியும். விட்டுக்கொடுத்துச் செல்வதுதான் வாழ்க்கை என்ற தத்துவங்களை காமெடி முலாம் பூசி வழங்கியுள்ளார், இயக்குனர் கணேஷ் கே.பாபு. தலைமுடி வளர்த்து தறுதலையாகச் சுற்றும் காலம், முடியை அளவாக வெட்டி பொறுப்புள்ள தந்தையாக வாழும் காலம் என்று, இரண்டிலும் வெரைட்டி காட்டி சிறப்பாக நடித்துள்ளார் கவின். அபர்ணா தாசும் கிளைமாக்சில் சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தின் பலம், கவின் நண்பர்களாக நடித்தவர்கள். அவர்களின் இயல்பான வசனங்களும், மேனரிசங்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது. எழிலரசன் ஒளிப்பதிவும், ஜென் மார்ட்டின் இசையும் கதையை நடத்திச்செல்ல உதவியுள்ளன. என்னதான் கவின் மீது கோபம் இருந்தாலும், அபர்ணா தாஸ் தான் பெற்ற பிள்ளையைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்வதிலும், நவீன டெக்னிக்கல் உலகில் கவின் தன் மனைவியைக் கண்டுபிடிக்க முடியாமல் அலைவதிலும் லாஜிக் இடிக்கிறது.
அவர்கள் விஷயத்தில் இருவரது குடும்பத்தினரும் ஈடுபாடு காட்டாதது நெருடுகிறது. என்றாலும், ‘டாடா’ இளசுகளுக்கான படமும், பாடமும்.