வர்ணாஸ்ரமம் - விமர்சனம்
2/18/2023 1:59:09 PM
தமிழ்நாட்டில் நடந்த ஆணவக்கொலைகள் பற்றி டாக்குமென்டரி படம் தயாரிக்க, அமெரிக்காவில் இருந்து வரும் சிந்தியா லவுர்டேக்கு ஆட்
தமிழ்நாட்டில் நடந்த ஆணவக்கொலைகள் பற்றி டாக்குமென்டரி படம் தயாரிக்க, அமெரிக்காவில் இருந்து வரும் சிந்தியா லவுர்டேக்கு ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணனும், வைஷ்ணவி ராஜூம் உதவுகின்றனர். தமிழகத்தில் நடந்த பல்வேறு ஆணவக்கொலைகள் மற்றும் அதன் பின்னணி குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களை பேட்டி எடுக்கும் அவர்கள், பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளாகின்றனர்.
அப்போது இளம் காதல் ஜோடி ஒன்று சிந்தியா லவுர்டே குழுவினரிடம் அடைக்கலம் தேடுகிறது. அதைக் கண்டுபிடிக்கும் காதல் ஜோடியின் பெற்றோர், சாதிவெறியுடன் அவர்களைக் கொல்லத் துரத்துகின்றனர். மேலும், அண்ணனே தன் தங்கையை சாதிவெறிக்காக கொன்றதாக இன்னொரு சம்பவம் இடம்பெறுகிறது. அண்ணனை சிறையில் சந்திக்கும் சிந்தியா லவுர்டே, உண்மை என்ன என்று கண்டுபிடிக்கிறார்.
இதையடுத்து காவல்துறையிடம் செல்லும் அவர், உண்மையைான குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா, இல்லையா என்பது மீதி கதை. சாதிவெறியர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக படத்தை உருவாக்கி இருக்கிறார், இயக்குனர் சுகுமார் அழகர்சாமி. இப்படத்தை தயாரித்து, டாக்குமென்டரி படத்துக்காக சம்பந்தப்பட்டவர்களை பேட்டி எடுப்பவராக நடித்துள்ளார் சிந்தியா லவுர்டே.
சாதி பாகுபாடு மற்றும் ஆணவக்கொலைகள் பற்றி அறிந்து கோபப்படும் காட்சிகளிலும், சாதிவெறி கூடாது என்று அட்வைஸ் செய்யும் காட்சிகளிலும் நன்கு நடித்துள்ளார். ஆட்டோ டிரைவராகவும், வில்லனாகவும் இருவேடங்களில் ராமகிருஷ்ணன் நடித்துள்ளார். சாதி பாகுபாடு பற்றியும், குறிப்பிட்ட சமூகத்தின் சடங்கு, சம்பிரதாயங்கள் குறித்தும் கேள்வி எழுப்பும் காட்சிகளில் வைஷ்ணவி ராஜ் நிமிர்ந்து நிற்கிறார்.
அமீர், ராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குஹாஷினி உள்பட நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர். பிரவீணா ஒளிப்பதிவும், தீபன் சக்ரவர்த்தி இசையும் கதையை நேர்த்தியாகக் கொண்டு சென்றுள்ளன. இன்னும் எத்தனை யுகங்களானாலும், சாதிவெறி மட்டும் மனிதர்களிடம் இருந்து மறையாது என்பதைச் சொல்லியிருக்கும் இயக்குனர், கிளைமாக்சை சற்று வித்தியாசமாக யோசித்திருக்கலாம்.