தேனி பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து, ரெடின் கிங்ஸ்லி வீட்டில் தங்கும் விஜய் ஆண்டனி, தினமும் ரயிலில் ஆபீசுக்குச் செல்லும்போது ரியா சுமனைப் பார்க்கிறார். முதலில் மோதல், பிறகு காதல் என்று அவர்கள் வாழ்க்கை மாறுகிறது. அப்போது நடக்கும் சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சி சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் சரண்ராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். அதிக ஓட்டுகள் வாங்கி ஜெயிக்க வேண்டிய நெருக்கடியில், பல கோடி ரூபாய் பணத்தை தனது தம்பி தமிழ் மூலம் களத்தில் இறக்குகிறார். அந்த 300 கோடி ரூபாய் பணம், அடையாளம் தெரியாத நபரால் கொள்ளை அடிக்கப்படுகிறது.
அமைச்சரின் ஆட்கள் சிலர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இந்த வழக்கை டெபுடி கமிஷனர் கவுதம் வாசுதேவ் மேனன் விசாரிக்கிறார். அந்த கொள்ளைக்காரனும் மற்றும் கொலைகாரனும் யார் என்று கண்டுபிடிக்கிறார். உடனே இந்த விஷயம் அமைச்சருக்கு தெரியவருகிறது. பிறகு என்ன நடக்கிறது மீதி கதை. விஜய் ஆண்டனி தனது ஸ்டைலை மாற்றிக்கொண்டு, ஆக்ஷனில் பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார். ரியா சுமனுடனான காதல் காட்சியில் நெருக்கம் காட்டியுள்ளார். பிளாஷ்பேக்கில் பொறுப்பு உணர்ந்து நடித்திருக்கிறார். ரியா சுமன் இயல்பாக நடித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனனின் விசாரணை சற்று விறுவிறுப்பாக இருக்கிறது.
வில்லத்தனம் கொண்ட அமைச்சர் சரண்ராஜ், அவரது தம்பி இயக்குனர் தமிழ் மற்றும் ‘ஆடுகளம்’ நரேன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா ஆகியோர் நிறைவாக நடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு ஐஸ்வர்யா தத்தா ஆடியிருக்கிறார். மின்சார ரயில் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில், ஒளிப்பதிவாளர் ஐ.நவீன் குமார் கடுமையாக உழைத்துள்ளார். விவேக், மெர்வின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை கரம் மசாலா. தேனி பகுதியின் மலைவாழ் மக்களின் அடிப்படை பிரச்னை யில் அரசியல்வாதி செய்யும் ஊழல்களை மையப்படுத்தி, கமர்ஷியல் படத்தை இயக்கியுள்ள தனா எஸ்.ஏ, ஆற்றுக்கு நடுவே பாலம் என்ற பழைய கதையையே தேர்வு செய்து இருப்பது மைனஸ்.