சென்னை: அமைதியான குணாதிசியம் கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதே சமயம தனது போல்டான கருத்துகளாலும் பேச்சுகளாலும் சில சமயம் அதிர்வலைகளை ஏற்படுத்துவார். இந்தி மொழிதான் தேசிய மொழி என அமித்ஷா கூறும்போது, ‘எனக்கு தமிழ்தான் முக்கியம்’ என ஒரு பேட்டியில் சொன்னார் ரஹ்மான். ‘கேரளா ஸ்டோரி’ பெயரில் வன்மம் பரப்பும் படம் வந்தபோது, கேரள மசூதியில் இந்து ஜோடிக்கு நடந்த திருமண வீடியோவை பதிவிட்டு, ‘இதுதான் நிஜ கேரளா ஸ்டோரி’ என பரபரப்பை ஏற்படுத்தியதும் ரஹ்மான்தான். ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது இப்போதைய பாடல்களில் வரிகள் ஒழுங்காக கேட்க மாட்டேங்குது என செய்தியாளர் கூற, ‘நல்ல குவாலிட்டியில் ஹெட்ஃபோன் வாங்கி போட்டு கேட்டு பாருங்க’ என கூறியிருந்தார். அதேபோல் தனது மனைவி ஒரு நிகழ்ச்சியில் இந்தியில் பேசியபோது ‘தமிழில் பேசுங்க’ என சொல்லி அரங்கத்தை அதிரவைத்தார்.
இந்நிலையில் தனது மகன் அமீனிடம் ஸ்டேஜில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அதிரடிக்கு மட்டுமல்ல, நகைச்சுவை செய்வதிலும் ரஹ்மான் வல்லவர் என்பதை நிரூபித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சி மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்டு வாசிக்க அமீன் பாடலை பாடினார். பாடலை பாடி முடித்த பிறகு தனது மகனிடம் ஏ.ஆர்.ரஹ்மான், ‘பொண்ணுங்க எல்லாம் இருக்காங்க எப்படிப்பா இருக்கு. கூச்சமா இருக்கா, பயமா இருக்கா, உற்சாகமா இருக்கா என தமிழில் கேட்கிறார். அப்போது அரங்கத்தில் சிரிப்பொலி கேட்கிறது. அதற்கு அமீன் ஆங்கிலத்தில் அப்படி எதுவும் இல்லை என்கிறார். உடனடியாக ரஹ்மான், ‘தமிழில் பேசுப்பா’ என சொல்ல அரங்கம் அதிர்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.