விஞ்ஞானி நரசிம்மன் பக்கிரிசாமி, விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவருக்கு நண்பர் ஒருவர் உதவுகிறார். தனது காதலி சுமிராவுடன் மலைப்பிரதேச வீட்டில் வசிக்கும் நரசிம்மன் பக்கிரிசாமி, வேலை விஷயமாக வெளியூர் செல்கிறார். அப்போது அவரது வீட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் முகமூடி மனிதன், சுமிராவின் தோழி ஷார்வியை மிகக்கொடூரமான முறையில் கொல்கிறான்.
பிறகு சுமிராவையும் கொல்ல முயற்சிக்கிறான். யார் அவன்? எதற்காக சுமிராவைக் கொல்ல வருகிறான்? வெளியூர் சென்ற நரசிம்மன் பக்கிரிசாமி என்ன ஆனார் என்பது மீதி கதை. ஹீரோவாக நடித்து, கதை எழுதி இயக்கி தயாரித்துள்ளார் நரசிம்மன் பக்கிரிசாமி. பரபரப்பாக நடித்திருக்க வேண்டிய விஞ்ஞானி வேடத்தில், இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். முகமூடி மனிதனிடம் இருந்து தப்பிக்கப் போராடும் சுமிரா, இறுதியில் வில்லியாக மாறி அதிர வைக்கிறார். அவரது தோழியாக வரும் ஷார்வி உள்பட ஓரிருவர், இயக்குனர் சொன்னதைச் செய்துள்ளனர்.
கிரண் ஒளிப்பதிவு மற்றும் புரூஸ், ஷியாமளா தேவியின் பின்னணி இசை, கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. சிறிய பட்ஜெட் என்பதாலோ என்னவோ, முழு படத்தையும் ஒரு வீடு மற்றும் சில நடிகர்களை மட்டும் வைத்து உருவாக்கி இருக்கின்றனர். சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை திரைக்கதை அமைப்பிலும், அதிநவீன தொழில்நுட்பத்திலும் இன்னும் தரமான முறையில் கையாண்டிருக்கலாம். ஹெச்எம்எம் என்றால், ஹக் மீ மோர் என்று அர்த்தம் சொல்கின்றனர்.