சென்னை: ஸ்ரீசித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி.ராஜேஸ்வர ராவ் தயாரித்துள்ள படம், ‘சட்டம் என் கையில்’. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி ஏ.அபிராமு இயக்கியுள்ளார். இப்படம் ஆந்திராவில் ‘அந்திம தீர்ப்பு’ என்ற பெயரில் உருவானது. ஹீரோயினாக சாய் தன்ஷிகா நடித்திருக்கிறார். மற்றும் விமலா ராமன், கணேஷ் வெங்கட்ராம், சத்யபிரகாஷ், தீவாளி தீபு, நாகமகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
என்.சுதாகர் ரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கோட்டி இசை அமைத்துள்ளார். பத்மா பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார். 1978ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘சட்டம் என் கையில்’ படத்தின் கதைக்கும், இப்படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை. தலைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
சென்டிமெண்ட், பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்படம், வருகிற 21ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து டி.ராஜேஸ்வர ராவ் கூறுகையில், ‘எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கக்கூடிய சர்வசக்தி படைத்த ஜமீன்தாரின் குடும்பத்துக்கும், நீதிக்காக கடுமையாகப் போராடும் ஏழைப் பெண்ணுக்கும் நடக்கும் யுத்தம்தான் கதை. தனி நபராக சட்டத்தின் முன்பு போராடி, தனது கையால் தீர்ப்பு கொடுத்த வீரதீர பெண்ணைப் பற்றிய படம் இது’ என்றார்.