சென்னை: விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிஃப். இப்போது முன்னணி நட்டத்திரங்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் கலக்கி வருகிறார். சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ஆஷிஃப்பிற்கு நடிப்பில் ஆர்வம் அதிகம், விரைவில் வெளியாகவுள்ள விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆஷிஃப் கூறுகையில், ‘‘துப்பாக்கி என் முதல் படம் என்பதால், எனக்கு நிறைய தயக்கம் இருந்தது ஆனால் விஜய் மிக ஆதரவாக, பொறுமையாக சொல்லித்தந்து எங்களைப் பார்த்துக்கொண்டார். விக்ரம் ஒரு பிறவி நடிகர், எந்த கதாப்பாத்திரம் தந்தாலும் அதுவாகவே மாறிவிடுவார். சூர்யாவுடன் நடித்தது மறக்க முடியாது. அவர் கடுமையான உழைப்பாளி’’ என்றார். அடுத்தடுத்து புதிய தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.