புதுடெல்லி: தமிழ் உள்பட பல மொழிகளில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் அறிவித்துள்ளார். பாலிவுட்டில் ‘டான்’ என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (74), பாஜ ராஜ்யசபா எம்பியாக இருந்துள்ளார். நடிகராக, தயாரிப்பாளராக, டி.வியில் புகழ்பெற்றவராக, தொழிலதிபராக திகழும் அவர், இந்திய சினிமாவுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பை பாராட்டி, அவருக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘வரும் அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவில், பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த வருடம் மிதுன் சக்ர வர்த்திக்கு ஒன்றிய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்திருந்தது. கடந்த 1976ம் ஆண்டு மிருணாள் சென் இயக்கிய ‘மிரிகயா’ என்ற இந்தி படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி நடிகராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றார்.
1982ல் வெளியான ‘டிஸ்கோ டான்ஸர்’ என்ற இந்தி படம் அவரை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. 1989ம் ஆண்டில் மட்டும் மிதுன் சக்ரவர்த்தி ஹீரோவாக நடித்த 19 படங்கள் திரைக்கு வந்தன. பல ஆண்டுகளாக திரைத்துறையில் இயங்கி வரும் அவர், ‘தஹாதேர் கதா’ (1992), ‘சுவாமி விவேகானந்தர்’ (1998) ஆகிய படங்களில் நடித்ததற்காக தேசிய விருது வென்றுள்ளார். கடைசியாக அவர் பெங்காலி மொழியில் வெளியான ‘காபூலிவாலா’ என்ற படத்திலும், இந்தியில் ‘காஷ்மீர் பைல்ஸ்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இந்தி, பெங்காலி, பஞ்சாபி, ஒரியா, போஜ்புரி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டி.வி நிகழ்ச்சிகளிலும், மியூசிக் வீடியோக்களிலும் தோன்றியுள்ளார். தமிழில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் திரைக்கு வந்த ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற படத்தில், முதலியார் என்ற கதாபாத்திரத்தில் மிதுன் சக்ரவர்த்தி நடித்திருந்தார். இந்தப் படத்தை ஆதியின் அண்ணன் சத்ய பிரபாஸ் பினிஷெட்டி எழுதி இயக்கி இருந்தார்.
* ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு
ஒன்றிய அரசின் மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட பதிவில், ‘தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வான மிதுன் சக்ரவர்த்திக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சினிமாவுக்கு அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. திரைத்துறை மற்றும் தனிப்பட்ட முறையில் அவர் மேலும் வெற்றி பெறவும், மகிழ்ச்சி அடைய வும் வாழ்த்துகிறேன். வரும் அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.