சென்னை : பல்வேறு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாமிலி. தனது சிறந்த நடிப்புக்காக தேசிய மாநில மற்றும் தனியார் விருதுகள் வாங்கியுள்ள அவர் பிறகு ஹீரோயினாக சில படங்களில் நடித்தார். ஆனால் தொடர்ந்து அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் தனது கவனத்தை படிப்பு மற்றும் ஓவியம் வரைவதில் செலுத்தினார். ஷாமிலியின் அக்கா ஷாலினி அண்ணன் ரிச்சர்ட் ஆகியோரும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள். அஜித் குமாரை காதல் திருமணம் செய்த பிறகு ஷாலினி சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து ஒதுங்கிவிட்டார். தற்போது ரிச்சர்ட் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுவரை ஷாமிலி வரைந்த ஓவியங்களை வைத்து கண்காட்சி நடத்த திட்டமிட்டார். அதன்படி ஷாமிலியின் ’ஷி’ (அவள்) என்ற தலைப்பிலான கலைப்படைப்பு நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது.
இதில் மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மான் கலை இயக்குனர் தோட்டா தரணி சுஹாசினி அர்ஜூன் ஐஸ்வர்யா அர்ஜூன் ரிச்சர்ட் விஷ்ணுவர்தன் நீரவ்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர். விஷூவல் கம்யூனிகேஷனில் பட்டப்படிப்பு மற்றும் சிங்கப்பூர் லசால் கலைக்கல்லூரியில் விஷூவல் ஆர்ட்ஸில் டிப்ளமோ பெற்ற ஷாமிலி கலைத்தொழிலில் அதிக கவனத்துடன் ஈடுபட்டு வருகிறார். கடந்த 6 ஆண்டுகளில் ஆர்ட்டிஸ்ட் ஏ.வி.இளங்கோவிடம் இருந்து முறையான வழிகாட்டுதலையும் பயிற்சியையும் பெற்று தனது திறமைகளை மேம்படுத்தியுள்ளார். பாரீஸ் கலைக்கல்லூரியில் ஆக்கப்பூர்வமான பயிற்சியையும் சிங்கப்பூரில் சீனா இங்க் புளோரன்ஸ் அகாடமியான ரியாசியில் கண்ணாடி ஓவியம் வரைவதில் நிபுணத்துவம் பெற்றவர் ஷாமிலி என்பது குறிப்பிடத்தக்கது.