சென்னை: நடிகை திரிஷா சென்னையில் பல ஆண்டுகள் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டார். அந்த வீட்டை மாஜி ஹீரோவான பானுசந்தர் வாங்கியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை செனடாப் சாலையில் திரிஷாவுக்கு சொந்தமான வீடு இருந்தது. இந்த வீட்டை பானுசந்தருக்கு ரூ.18 கோடிக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து புது வீட்டுக்கு திரிஷா சென்றிருக்கிறார். இது குறித்து பானுசந்தர் கூறுகையில், ‘இந்த வீட்டை என்னுடைய மனைவிதான் அழகாக பராமரித்து வருகிறார்.
வீட்டில் நுழைந்தவுடன் இருந்த மினி பார் தற்போது அழகு பொருள் வைக்கும் இடமாக மாற்றி உள்ளேன். வீட்டை சுற்றி பச்சை பசேல் என செடிகளை நட்டது எனது மனைவிதான். அவருக்கு செடிகள் என்றால் ரொம்ப பிடிக்கும்’ என்றார். தமிழ் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பானுசந்தருக்கு தற்போது 72 வயது.
கடந்த 80களில் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்த பானுசந்தர், பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான ‘மூடுபனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகி அதன் பிறகு பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான அருண் விஜய் நடித்த ‘ஓ மை டாக்’ என்ற படத்தில் கூட ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். இவரது மூத்த மகன் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறார். இளைய மகனும் அமெரிக்காவில் ஓட்டல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.