மும்பை: மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’ படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி. இவர் நடிகர் சித்தார்த்தை காதலித்து வருகிறார். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் சினிமாவுக்கு வரும் முன் அதிதி ராவ் இப்படித்தான் இருந்தார் என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அதிதி ராவின் மூக்கு வடிவம் வேறு மாதிரியாக இருக்கிறது. முகமும் கன்னங்கள் வீங்கியபடி காட்சியளிக்கிறது.
அவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது தோற்றத்தையும் மூக்கையும் மாற்றியிருக்கிறார் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். அவரது பழைய முகம், புது முகம் இரண்டு புகைப்படங்களையும் வைத்து சோஷியல் மீடியாவில் இதுதொடர்பான விவாதம் சூடாக பறந்தது. ‘அதிதி ராவின் இந்த நிஜ முகம் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது’ என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ‘பழைய முகமே நன்றாக இருக்கும்போது, ஏன் இப்படி அதிதி செய்தார்?’ என ஒரு நெட்டிசன் கேட்டிருக்கிறார்.
டாக்டர் ஒருவர், ‘நானும் பிளாஸ்டிக் சர்ஜன்தான். இதுபோல் ஆபரேஷன் செய்த பிறகு அதை உலகத்துக்கு தைரியமாக சொன்னால்தான் மற்றவர்களும் இதுபோன்ற சிகிச்சைக்கு முன்வருவார்கள். ஆனால் பிரபலங்கள் இதை மறைப்பது ஏன் என்றுதான் புரியவில்லை’ என குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் இந்த விவாதங்கள் காரசாரமாக நடந்து வந்தபோதும், இதைப் பற்றி பதில் எதுவும் சொல்லாமல் அதிதி ராவ் அமைதி காக்கிறார்.