வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணை தயாரிப்பில் பாடலாசிரியர் – நடிகர் – இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ அகத்தியா ‘.
கலை இயக்குனராக பணியாற்றும் அகத்தியா ( ஜீவா) தனது சொந்த செலவில் ஒரு படம் எடுக்க வேண்டி ஒரு அரண்மனையை தேடிப் பிடித்து அங்கே செட் அமைக்கிறார். ஆனால் எதிர்பாராவிதமாக படப்பிடிப்பில் தடை ஏற்படுகிறது. அடுத்து என்ன என குழப்பத்தில் நிற்கும் அகத்தியாவிற்கு கிடைத்த அரண்மனையை விடாமல் சம்பாதிக்க வழி சொல்கிறார் அவரது பள்ளி தோழி மற்றும் காதலி வீணா ( ராஷி கண்ணா ) . இந்த அரண்மனையை ஒரு பேய் வீடாக மாற்றி பாண்டிச்சேரி போன்ற சுற்றுலா தளத்தில் வருமானம் ஈட்டலாம் என குழுவாக சேர்ந்து முடிவு செய்கிறார் அகத்தியா.
அவர்கள் விருப்பப்பட்டபடி கூட்டமும் , வருமானமும் அதிகரிக்கிறது. ஆனால் உடன் உண்மையாகவே சில மர்மமான மற்றும் அமானுஷ்ய உருவங்கள் தோன்றுவது, உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இதில் அகத்தியா மற்றும் நண்பர்களும் சிக்க எதனால் இந்த அரண்மனை மர்மமாக இருக்கிறது, திடீரென தோன்றும் உருவங்கள் யார் என ஆய்வில் இறங்குகிறார்கள். அதற்கு பதிலாக பிளாஷ்பேக் விரிகிறது சித்த மருத்துவர் சித்தார்த்தனின் ( அர்ஜுன்) கதை . ஏன் இவர்கள் ஆத்மா இன்னமும் சாந்தியடையாமல் இப்படி சுற்றுகிறார்கள் பின்னணி நிலவரம் என்ன அந்த அரண்மனையில் உண்மையில் என்னதான் நடந்தது என்பது மீதிக்கதை.
ஜீவா வழக்கம் போலவே ஹீரோவாக என்ன நியாயம் கதைக்குக் கொடுக்க முடியுமோ கொடுத்திருக்கிறார். காதல், காமெடி, ஆக்ஷன் என அக்மார்க் கமர்சியல் ஹீரோ எனலாம். ஆனால் அவரையும் மீறி மனதில் இன்னொரு நாயகனாக நிற்கிறார் அர்ஜுன். இந்த வயதிலும் எந்த வயது என சொல்ல முடியாத அளவிற்கு பிட் ஆகவும், இளமையாகவும் தெரிவது அவருக்கு இன்னொரு பலம். இந்த வயதிலும் காதல் ரொமான்ஸ் என்றால் நாங்க பார்க்கிறோம் நீங்க நடிங்க சார் என சொல்லும் அளவிற்கு தன்னை அற்புதமாக ஸ்கிரீனில் காட்சிப்படுத்தி கொள்கிறார். குறிப்பாக ஆங்கிலேயர்களின் உடைகள் , பிரான்ஸ் ரிட்டன் , மருத்துவர் என்றால் அவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறார்.
மற்ற மொழிகளில் வித்தியாசமான கேரக்டர்களில் பயன்படுத்தினாலும் தமிழ் சினிமா ராஷி கண்ணாவை பேய் படங்களில் சுற்றித் திரியும் அழகான ராட்சசியாகவே பயன்படுத்திக் கொள்கிறது. அவரும் சலைக்காமல் தன்னால் முடிந்தவரை கவர்ச்சி, காதல், ரொமான்ஸ் என படத்திற்கு அழகு சேர்க்கிறார். ராதா ரவி, சார்லி, ரோஹிணி, நிழல்கள் ரவி, உள்ளிட்டோர் கதை நகர்த்தலுக்கான நடிகர்களாக கொடுத்த வேலையை அந்தந்த அளவிடுகளில் செய்து முடித்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய நடிகையான அபிராமியை மிகச் சில காட்சிகளில் சிறப்புத் தோற்றத்தில் பயன்படுத்தியிருப்பது தான் சற்றே நெருடல். ரெடின் கிங்ஸ்லீ, யோகி பாபு , விடிவி கணேஷ் உள்ளிட்டோர் ஆங்காங்கே படத்தின் காமெடி ஃபில்லர்களாக பயன்பட்டிருக்கிறார்கள். எட்வின் சொனேன்பிலிக் மற்றும் மாடில்டா பிளாஷ்பேக் காட்சிகளில் ஆங்கிலேய ஆட்சி காலத்துக்கு சிறப்பான தேர்வு.
இருவிதமான அரண்மனை செட்டிங் படத்துக்கு மிகப்பெரும் பலம். மேலும் ஆங்கிலேய ஆட்சி கால கிராபிக்ஸ், செட்டிங்ஸ் என கலை இயக்குநர் பி.ஷண்முகம் மெனக்கெடல் பளிச்சென தெரிகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலம், ஹாரர், சித்த மருத்துவம், ஆன்மீகம், காமெடி என அனைத்தையும் சீராக கலக்க முயற்சி செய்து சில இடங்களில் ஓவர் டோஸ் மோடுக்கு நம்மை தள்ளுகிறார் இயக்குனர் பா. விஜய். ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளராக தமிழுக்கு தான் செய்ய வேண்டிய சில சேவைகளை ஏதேனும் ஒரு வழியில் செய்ய முயற்சி செய்திருப்பதற்கு பாராட்டுகள்.
கலர்ஃபுல் விஷுவல், கண்ணுக்கு விருந்தாக தருணங்கள் உள்ளிட்ட திரையரங்க மொமெண்ட்களுக்கு ஆவன செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி. அப்பாவின் இசை என்பதால் அவருக்கு உரிமை அதிகம் என்பதாலேயே எந்தப் பாடலை பயன்படுத்தினால் பார்வையாளன் எழுந்து செல்ல மாட்டான் என தெரிந்து என் இனிய பொன் நிலாவே பாடல் பயன்பாடு யுவன் சங்கர் ராஜாவின் புத்திசாலித்தனம். பின்னணி இசை பலம், பாடல்களுக்கு இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம். நிறைய காட்சிகள், ஒவ்வொரு கேரக்டருக்கும் கதை, பின்னணி வரலாறு என எடிட்டர் சன் லோகேஷ் மிகப்பெரிய சவாலை சந்தித்து இருக்கிறார் என்பதும் தெரிகிறது.
‘ பார்த்தா பச்சை இலை, பத்த வெச்சா பாம் ‘ போன்ற வசனங்கள் கதைக்கான பஞ்ச் வசனமாக மனதில் இடம் பிடிக்கிறது. மொத்தத்தில் பார்த்து பழகிய டெம்ப்லேட் என்றாலும் தமிழ் சினிமாவில் ஹாரர் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என எந்த எதிர்பார்ப்பும் இன்றி வருவோருக்கு எப்போதுமான ஒரு கமர்சியல் ஹாரர் படமாக இருக்கும் இந்த அகத்தியா.