சென்னை: அஃப்ரிஞ்ச் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜாபர் இயக்கும் படத்தில் விடாமுயற்சி கணேஷ் சரவணன் நடிக்கிறார். படம் குறித்து இயக்குனர் ஜாபர் கூறியது: படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ‘ராவணக் கோட்டம்’, அஜித்தின் ‘விடா முயற்சி’ படங்களில் நடித்துள்ள கணேஷ் சரவணன் இதில் ஹீரோ. ஆயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். 2018ம் ஆண்டு கல்லூரி முடித்த காதலர்கள், ஒரு சந்தர்ப்பத்தில் பிரிகிறார்கள். இப்போது அவர்கள் வேறு ஒரு ஜோடியுடன் திருமணமாகி வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படியொரு சூழலில் இவர்கள் ஓரிடத்தில் மீண்டும் சந்திக்கிறார்கள். அது ஒரு அறை. அந்த அறை திடீரென லாக் ஆகிவிடுகிறது. அந்த சமயத்தில் உறவினர்கள் பலரும் அங்கு வந்துவிட, கதவு திறக்கப்பட்டு இவர்கள் வெளியே வந்தால் என்ன நடக்கும் என்ற கான்செப்ட்டில் படம் செல்லும். இது காமெடி திரில்லர் ஜானர். கணேஷ் சரவணனின் மனைவியாக ஆயிஷா நடிக்கிறார். காதலி வேடத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். இந்த படத்தை அஃப்ரிஞ்ச் தயாரிக்கிறார். இசை சி.சத்யா, ஒளிப்பதிவு சதீஷ்குமார் துரைராஜ். 35 நாளில் முழு படத்தையும் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளோம்.