நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குனர் அருண் பாண்டியனின் மகள் என்ற அடையாளத்துடன் திரைப்படத்தில் நடிக்க வந்தவர், கீர்த்தி பாண்டியன். 2019ல் வெளியான ‘தும்பா’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து அருண் பாண்டியனுடன் இணைந்து ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நடித்தார். பிறகு ‘கண்ணகி’, ‘கொஞ்சம் பேசினால் என்ன’ உள்பட சில படங்களில் நடித்தார். ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த அசோக் செல்வனை காதலித்த அவர், இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது ‘அஃகேனம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் ஜூலை 4ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசிய விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் பேசுகையில், ‘இதில் நான் இந்திரா என்ற டாக்ஸி ஓட்டுநர் கேரக்டரில் நடித்துள்ளேன். எனக்கு டிரைவிங் என்றால் மிகவும் பிடிக்கும். நான் நடிகை ஆகாமல் இருந்திருந்தால், கார் ரேஸ் வீராங்கனையாக வந்திருப்பேன். இந்த ஆசையை என் அப்பாவிடம் சொன்னேன். எனக்கு எப்போதும் அவர் உறுதுணையாக இருப்பார். என் அப்பாதான் எனக்கு சூப்பர் ஹீரோ’ என்றார். ‘நடிப்பு மட்டுமின்றி, கார் ரேஸிலும் அஜித் குமார் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதுபோல் நீங்களும் கார் ரேஸில் ஈடுபடுங்கள்’ என்று ரசிகர்கள் சிலரும், நெட்டிசன்கள் பலரும் கீர்த்தி பாண்டியனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.