‘ஈவில் டெட் ‘, ‘டோண்ட் ப்ரீத் ‘ படங்களை இயக்கிய ஃபெடே அல்வாரெஸ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘ஏலியன்: ரோமுலஸ்’. ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கெய்லி ஸ்பேனி, டேவிட் ஜான்சன், ஆர்ச்சி ரெனாக்ஸ், இசபெலா மெர்சிட், ஸ்பைக் ஃபியர்ன், ஐலீன் வு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிவென்டியத் செஞ்சுரி ஸ்டூடியோஸ் இந்தியா, இந்தப் படத்தை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிடுகிறது. AI தொழில் நுட்பத்தால் மறு உருவாக்கம் செய்யப்பட்ட தன் சகோதரனுடன் சுரங்கத்தில் வேலை செய்து வருகிறார் ரெயின் கர்ரடினே(கெய்லி ஸ்பேனி).
அந்த கிரகத்தில் சூரிய ஒளி கிடையாது, மேலும் வெப்பம் தகிக்கும் ஒரு அடிமை கிரகம். தனது வேலை காலம் முடிந்து விட எப்படியேனும் இந்த கிரகத்தை விட்டுச் செல்ல வேண்டும் என நினைக்கிறார் ரெயின். ஏனேனில் அவரது பெற்றோர் சுரங்க வேலை செய்ததால் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால், இனியும் இந்த வேலை வேண்டாம் என முடிவு எடுக்கிறார் ரெயின். மேலும் உயிர்வாழத் தகுந்த இவாகா எனும் கிரகத்திற்கு செல்ல வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
எனவே தன் முன்னாள் காதலர் டெய்லர், அவரின் தங்கை கே. ஜோர்ன் ஆகியோரும் இணைந்து தப்பித்து இவாகா செல்ல முயற்சிக்கிறார்கள். இவர்களின் பயணத்தில் இவர்களின் ஸ்பேஸ் வாகனத்தைக் கொண்டு இன்னொரு ஸ்பேஸ் ஷிப்பில் இருக்கும் காப்சூல்கள் மற்றும் எரிவாயுவை எடுத்துக்கொண்டு இவர்கள் இவாகா செல்ல வேண்டும். அப்படியான முயற்சியில்தான் இவர்கள் ரோமுலஸ் விண்வெளி ஆய்வுக்கூடத்தை அடைகிறார்கள்.
அங்கே ஏற்கனவே ஏலியன்களால் வேட்டையாடப்பட்டு ஆய்வுக்கூடம் நிலைகுலைந்து கிடக்கிறது. அந்த ஆபத்தான சூழலில் இந்த நண்பர்கள் குழுவும் மாட்டிக்கொள்ள முடிவு என்ன , இவர்கள் நினைத்தபடி இவாகா சென்றார்களா இல்லையா என்பது மீதிக் கதை. வழக்கமான ஏலியன்களின் துரத்தல், அதிலிருந்து தப்பிக்க போராடும் குழு என்கிற கதைக் களம்தான். ஆனால் 3டி தொழில்நுட்பத்தில் விண்வெளி கிரகங்கள், பால்வழி அண்டம், ஆய்வுக்கூடத்தின் சேசிங் காட்சிகள், நில ஈர்ப்பு சார்ந்த காட்சிகள் என சுவாரஸ்யமாக காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர்.
கெய்லி ஸ்பேனியின் ஆக்ஷன் மற்றும், சேசிங் காட்சிகள், ஏலியனுடனான ஸ்டன்ட் என ரசிக்க வைக்கின்றன. காலோ ஆலிவர்ஸ் ஓளியும், பெஞ்சமின் வால்ஃபிஸ்ச் ஒலியும் ஒன்றுக்கொண்டு சலைக்காமல் காட்சிகளுக்கு ஈடு கொடுத்து கவனம் பெறுகின்றன. மொத்தத்தில் ஏலியன் ஆட்டமும், வேட்டையும், அதில் தப்பிக்கும் விறுவிறு காட்சிகளையும் விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ‘ஏலியன் : ரோமுலஸ்‘ படம் நல்ல திரை அனுபவம் கொடுக்கும்.