சென்னை: இயக்குநர் சாய் ராஜேஷ் நீலம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நாயகனாக நடித்து வெளியான தெலுங்கு படம் ‘பேபி’. இப்படம் ரூ.10 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகி கடந்த ஜூலை 14ம் தேதி வெளியான இப்படம் ரூ.90 கோடி வரை வசூலித்து வெற்றியடைந்தது. விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’ பெரிய வரவேற்பை கொடுத்தது.
‘பேபி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோகிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழில் இளம் நடிகர் ஒருவர் இதில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் மற்றொரு படத்தில் ஆனந்த் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இப்படத்துக்கு ‘டூயட்’ என தலைப்பு வைத்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் மிதுன் கிருஷ்ணன் இயக்குகிறார். ரித்திகா நாயக் ஹீரோயினாக நடிக்கிறார்.