சென்னை: வேதாத்திரி மகரிஷி ஆசியுடன் எஸ்.கே.எம்.மயிலானந்தம் வழங்க, ஆழியாறு அறிவுத் திருக்கோயிலுடன் சேர்ந்து உலக சேவா சமுதாய சங்கம் தயாரித்துள்ள படம், ‘ஆனந்த வாழ்க்கை’. இதில் கே.பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடி கண்ணன், பிரியா, மாஸ்டர் ராமானுஜம் நடித்துள்ளனர். ஆர்.சுப்ரமணிய பாரதி எழுதி இயக்கியுள்ளார். சத்யா.சி இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உலக சேவா சமுதாய சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தம், துணை தலைவர்கள் சின்னசாமி, கே.ஆர்.நாகராஜன், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், கதிர், சமுத்திரக்கனி, எழில் பங்கேற்றனர்.
அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘எதிர்காலத்தில் உலகம் அமைதியாக இருக்க வேண்டும், மனிதர்களும் நலமுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
திரைப்படங்கள், மேடை நாடகங்கள் மூலம் மக்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் அன்று திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார்கள். அந்தவகையில் இந்த படம் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் சென்று, மற்ற மொழிகளிலும் கூட மொழிபெயர்த்து வெளியிடப்பட வேண்டும்’ என்றார்.