பார்வையற்றவராக தன்னை வெளிப்படுத்தும் கிரிஷ் (பிரசாந்த்), ரெஸ்ட்ரோ பாரில் பியானோ வாசிப்பவர். அங்கு நடிகர் கார்த்திக்கின் அறிமுகம் கிடைக்கிறது. கார்த்திக், சிம்ரனின் திருமண நாளில் அவர்கள் வீட்டுக்கு பியானோ வாசிக்க செல்லும் பிரசாந்த், கண்ணெதிரே நடந்த கொலையைக் கண்டு திடுக்கிடுகிறார். வீட்டுக்குள் சிம்ரனும், அவரது கள்ளக்காதலனான போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனியும் நடத்திய சம்பவங்கள், பிரசாந்தின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
இந்தியில் 2018ல் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இதை, பிரசாந்த் தந்தை நடிகர் தியாகராஜன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பல காட்சிகள் சுவாரஸ்யமாக இருப்பதும், ‘அந்தாதுன்’ பார்க்காதவர்களுக்கு ஆங்காங்கே ஏற்படும் திடுக்கிடும் திருப்பங்களும் கவனத்தை ஈர்க்கின்றன. பியானோ இசைக்கலைஞனாக வரும் பிரசாந்த், படம் முழுக்க ஆழமும், அழுத்தமும், அமைதியுமாக நடித்து, தனது ‘கம்பேக்’கை அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறார்.
அவருக்கு கண் தெரியுமா, தெரியாதா என்பதிலேயே சஸ்பென்ஸ் அதிகரித்து, இறுதியில் என்ன நடக்குமோ என்ற ஆவலை ஏற்படுத்துகிறது. நடிகர் கார்த்திக்காகவே வரும் கார்த்திக், ‘மௌன ராகம்’ படத்தைப் பார்ப்பது கூடுதல் சுவாரஸ்யம். பிரசாந்த், பிரியா ஆனந்தின் காதல் எல்லைமீறும் காட்சி, மிகவும் நாகரீகமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. வில்லி என்றால் இப்படியும் நடிக்கலாம் என்று வசனங்களிலும், முகபாவனைகளிலும் சிம்ரன் திகைப்பூட்டி ரசிக்க வைக்கிறார்.
பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், மனோபாலா ஆகியோர், அந்தந்த கேரக்டரை தங்களின் அனுபவ நடிப்பின் மூலம் பரிமளிக்க வைத்துள்ளனர். ரவி யாதவ் கேமரா, காட்சிகளைப் பிசிறின்றி தருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம். முழுநீள படத்தையும் போராடிக்காமல் நகர்த்தும் தியாகராஜனின் இயக்கம் நேர்த்தி.