சென்னை: கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பங்களிக்கும் வகையில், பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட ‘ஒழுக்கம்’ என்ற குறும்படத்தை தொடர்ந்து, ‘உறுதி’ என்ற விழிப்புணர்வு குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்விரு குறும்படங்களையும் மங்கை அரிராஜன் இயக்கியுள்ளார். ஜே.முகமது ரபி தயாரித்துள்ளார். ‘உறுதி’ குறும்படத்தை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டார். நடிகர் ராஜேஷ், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா எம்எல்ஏ, கோட்டை அப்பாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ராஜேஷ் பேசும்போது, ‘போதைப்பொருட்கள் மட்டுமல்ல, போதைப் பழக்க வழக்கங்களும் நம்மை அடிமையாக்கி விடும். சோம்பேறித்தனமே ஒரு போதைதான். எல்லா நேரமும் வேலை செய்வதும் ஒரு போதைதான். எந்த போதை பழக்கமும் இல்லாததால்தான், இந்த வயதிலும் எனது குரல் முதல் முகம் வரை பொலிவுடன் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் எத்தனை வயது வரையும் நல்ல திட்டங்களை தீட்ட முடியும். நம் குடும்பமும் நன்றாக இருக்கும். மங்கை அரிராஜன் இரு குறும்படங்களையும் சிறப்பாக இயக்கியுள்ளார். தமிழக முதல்வரின் மிகப்பெரிய முன்னெடுப்பு இது. இளைஞர்களின் போதைப்பழக்கம் என்பது அவர்கள் குடும்பத்தை மட்டுமல்ல, அவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் ஜீன் வரை ஊடுருவி பாதிக்கக்கூடியது’ என்றார்.