நடிகரும், ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கோபி நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம், ‘ஜேஎஸ்கே’ என்கிற ‘ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’. கடந்த ஜூன் 27ம் தேதி படம் திரைக்கு வரவிருந்த நிலையில், திரென்று சென்சார் தரப்பில், படத்தின் டைட்டிலில் இடம்பெற்றுள்ள ஜானகி என்ற பெயரை உடனே நீக்கும்படி வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டது. மேலும், படத்துக்கு சான்றிதழ் ெகாடுக்கவும் மறுத்துவிட்டனர். மறுதணிக்கை செய்த ரிவைஸிங் கமிட்டி, இதே காரணத்தை சொல்லி சான்றிதழ் கொடுக்க மறுத்தது. உடனே தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஜானகி என்ற பெயரை எதற்காக நீக்க வேண்டும் என்கிறீர்கள்? ஏற்கனவே இதுபோன்ற பெயர்களில் சில படங்கள் வந்துள்ளன.
அது ஒன்றும் குற்றவாளிக்காக வைக்கப்பட்ட பெயர் இல்லையே. நீதிக்காக போராடும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வைக்கப்பட்ட பெயர்தானே? சினிமாவை நீங்கள் அடக்கியாள நினைக்கிறீர்களா?’ என்று, சென்சார் வாரியத்தை நோக்கி பல கேள்விகளை கேட்டிருந்தார். இந்நிலையில், இப்படத்தின் பிரத்தியேக காட்சியை நீதிபதி பார்க்கிறார். பிறகு இந்த வழக்கில் தனது தீர்ப்பை சொல்கிறார். படத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் நடித்துள்ளனர். பிரவீன் நாராயணன் இயக்க, கிரீஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முன்னதாக திருவனந்தபுரம் சென்சார் போர்டு அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியிருந்தனர்.