சென்னை: தனது நீண்ட நாள் தோழியும், காதலியுமான ஜெஸ்ஸி என்பவரை கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதி, பிறகு சில தமிழ்ப் படங்களில் துணை நடிகராக தோன்றினார். பிறகு அவரை ‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற படத்தின் மூலமாக இயக்குனர் சீனு ராமசாமி ஹீரோவாக அறிமுகம் செய்தார். விஜய் சேதுபதி, ஜெஸ்ஸி தம்பதிக்கு சூர்யா என்ற மகன், ஸ்ரீஜா என்ற மகள் இருக்கின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில், சிறுவயது விஜய் சேதுபதி கேரக்டரில் சூர்யா நடித்தார். பிறகு ‘சிந்துபாத்’ என்ற படத்தில் விஜய் சேதுபதியும், சூர்யாவும் இணைந்து நடித்தனர். தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில், ‘பீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் சூர்யா விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகிறார்.
தற்போது நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ படம் ரிலீசாகியுள்ளது.
அப்படம் சம்பந்தமாக பேட்டி அளித்த விஜய் சேதுபதி, தனது மகன் சூர்யாவைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘சூர்யா எடுக்கும் சில முடிவுகளுக்கு எதிரான கருத்துகளை சொல்லியிருக்கிறேன். சில நேரங்களில் அவரை திட்டியிருக்கிறேன், அடித்திருக்கிறேன்.
ஆனால், அடித்த பிறகு சூர்யா விடம் மன்னிப்பு கேட்டுள்ளேன். ஒரு குழந்தைக்கு தான் செய்வது தவறு என்று தெரியாமல்தான் அதைச் செய்கிறது. ஆனால், அது செய்வது தவறு என்று தெரிந்த பிறகும் நாம் அடிப்பது என்பது, நம்மீதுதானே தவறு? என்றாலும், அந்த நேரத்தில் ஏற்படும் கோபம் காரணமாக அடித்துவிடுகிறோம். பிறகு குழந்தைகளை அணைத்துக் கொள்கிறோம்’ என்றார். இது வைரலாகியுள்ளது.