சென்னை: பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மூன்வாக்’ என்ற பான் இந்தியா படத்துக்கான உலக திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் பெற்றள்ளது. இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா ஆகிய இருவரும் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மனோஜ் என்.எஸ் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, அஜூ வர்கீஸ், அர்ஜூன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர், ராம்குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை, நடனம், காமெடி, சென்டி மெண்ட் அம்சங்களுடன் உருவாகி யுள்ள ‘மூன்வாக்’ படத்துக்கு அனூப் வி.ஷைலஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சேகர் விஜே, பியூஷ் ஷாஷியா நடனப் பயிற்சி அளித்துள்ளனர். ரேமண்ட் டெரிக் கிராஸ்டா எடிட்டிங் செய்துள்ளார். திவ்யா மனோஜ், பிரவீன் இலக், மனோஜ் என்.எஸ் இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் நடித்த ‘தி கோட்’, அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் வெளியிட்டிருந்த ராகுல் கூறுகையில், ‘25 வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணைந்துள்ள ‘மூன்வாக்’ படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என்றார்.